புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுக்குமாடி வீடுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரெடி! அமைச்சர் தகவல்.!



புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நரிமேட்டில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின்  சார்பில்  கட்டப்பட்டு வந்த 1,920 குடியிருப்பு கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில்  பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.


இது குறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் பொது மக்களின் முன்னேற்றத்திற்காக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நரிமேட்டில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1,920 குடியிருப்புகள் ரூ.150.58 கோடி மதிப்பீல் பூங்கா, விளையாட்டு திடல், கூட்டுக் குடிநீர், அங்காடி வசதிகள், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய தனி நகரமைப்பாக இக்குடியிருப்பின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்டு வரப்பட உள்ளது.


மேலும் இக்குடியிருப்புகளுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தும்  வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும்  7 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூ.3.17 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக முள்ளூரில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியிலிருந்து  நரிமேடு பகுதி வரை 6,300 மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது.  இப்பணிகள் அனைத்தும் வருகின்ற ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.  

இக்குடியிருப்புகளிலிருந்து பெறப்படும் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் புதுக்கோட்டை நகராட்சி மருப்பிணியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல ரூ.8.60 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்திடமிருந்து திட்டத் தொகை பெறப்பட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணிகள் விரைவில் தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப பட்டுள்ளது.

இதன் பயனாக புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள  வீடற்ற பொதுமக்களின் சொந்த வீடு கனவுத்திட்டம் விரைவில் நிறைவடைய உள்ளது.

இவ்வாறு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments