வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 27 வயதான மாணவி குல்ஃபிஷா ஃபாத்திமா.
இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலமான ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று ஃபாத்திமா கைது செய்யப்பட்டார்.
ஃபாத்திமா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பின. தற்போது 40க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஃபாத்திமா கைதை எதிர்த்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், அரசியலமைப்பை பாதுகாக்க துணிந்ததற்காகவும், மக்கள் விரோத CAA-NRC-NPR போன்ற சட்டங்களை அமைதியான முறையில் எதிர்த்ததற்காவும் இவர்மீது பொய்யாக UAPA சட்டம் போடப்பட்டுள்ளதாக கூறி 200-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
போலீஸ் காவலில் இருந்த போது ஃபாத்திமா, பலமுறை மனரீதியாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது ஜாமீன் விண்ணப்பங்கள் பலமுறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டுகின்றது, அந்த அறிக்கை. ஃபாத்திமாவுக்கு எதிரான அனைத்து ‘ஜோடிக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளையும்’ அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
சிஏஏ விற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள சஃபூரா சர்கார், இஷ்ரத் ஜஹான், தேவங்கானா காலித், நடாஷா நர்வால், மீரான் கைதர், ஷர்ஜீல் இமாம், ஷர்ஜீல் உஸ்மானி, காலித் சைஃபி, அகில் கோகாய், தைரிஜியா கொன்வார், பிட்டு சோனாவால், மனாஷ் கொன்வார் போன்ற இளம் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் தலைவர்களுக்காக நாங்கள் துணை நிற்போம் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. இதில் சிலருக்கு பெயில் கிடைத்திருந்தாலும் இன்னும் வழக்குகள் உள்ளன!
இந்த அறிக்கையில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான மன்றம், அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம், ஒற்றுமை மற்றும் தன்னார்வ நடவடிக்கைக்கான இளைஞர்கள் மற்றும் நீதி மற்றும் அமைதிக்கான மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
–ஒளியான்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments