சென்னையில் தெருவிளக்குகளை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்.!



சென்னையில் தெருவிளக்குகளை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.


சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதியில் 2 லட்சத்து 56 ஆயிரத்துக்கு மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. இந்த தெருவிளக்குகளை எரிய விடுவது மற்றும் அணைப்பது போன்ற பணிகள் மாநகராட்சியின் அந்தந்த மண்டல அலுவலகம் மூலம் கையாளப்படுகிறது.

இந்தநிலையில் தெருவிளக்குகளை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இருந்து கையாள்வதற்காக ‘தொலை கண்காணிப்பு அமைப்பு (ரீமோட் மானிட்டரிங் சிஸ்டம்) என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் உள்ள தெருவிளக்குகளை மாநகராட்சியின் தலைமையகத்திலிருந்தே கட்டுப்படுத்த தெருவிளக்கு தூண்களில் தொலை கண்காணிப்பு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும் மின்சார ஏற்ற இறக்கங்களை தானாகவே சரிசெய்துகொள்ளும்படியும், விளக்குகளில் ஏதும் பழுது ஏற்பட்டால் அந்தந்த பகுதி மாநகராட்சி என்ஜினீயருக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக தானாக எச்சரிக்கும்படியும் இந்த அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நிர்பயா நிதி மற்றும் சென்னை மாநகராட்சி நிதி சேர்ந்து சுமார் ரூ.41 கோடி செலவில் இந்த பணிகள் நடைபெற உள்ளது. மேலும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் மூலமும் இந்த பணிகள் நடைபெற இருக்கிறது. 

மேலும் தெரு விளக்குகள் மண்டல அலுவலகங்களுக்கு பதிலாக, இனி சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் இருந்து செயல்படுத்தப்படும். தெரு விளக்குகளை கண்காணிக்க மற்றும் பழுது பார்க்க 40 தெருக்களுக்கு ஒரு குழு உருவாக்கப்படும். இந்த தொழில்நுட்பம் மூலம் பழுது ஏற்படும் மின் விளக்குகள் சுலபமாக கண்டறிந்து விரைந்து பழுது நீக்கப்படும். விரைவில் இதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது,’ என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments