பெரம்பலூர் அருகே சொந்தச் செலவில் தார்ச்சாலை அமைத்த சுயேட்சை பெண் கவுன்சிலர்... குவியும் பாராட்டுகள்!



கொடுத்த தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்ற, சொந்தச் செலவில் சுமார் 1 கி.மீ நிலம் வாங்கி சாலை அமைத்துக் கொடுத்துள்ளார் சுயேட்சை பெண் கவுன்சிலர்.

தேர்தலின் போது அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை வெற்றி பெற்று வந்த பின்னர் மறந்து விடும் இந்தக் காலத்தில் பெரம்பலூர் அருகே சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர் ஒருவர் தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை, அரசின் உதவியை எதிர்பார்க்காமல் தனது சொந்தப் பணம் 12 லட்ச ரூபாயை செலவு செய்து சாலை அமைத்து வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றியம் 9 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றவர் தமிழரசி. வாக்கு கேட்கும்போதே சாத்நத்தம் கிராம பொதுமக்கள் தங்கள் ஊரிலிருந்து விவசாய இடுப்பொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கும் வேப்பூருக்கு நன்னை வழியாகச் சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் குறுகிய நேரத்தில் செல்லும் வகையில் சாலை அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் கவுன்சிலராக வெற்றிபெற்ற தமிழரசி அந்த மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் தனது சொந்தச் செலவில் சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார்.

அதற்காக சில விவசாயிகளிடம் தேவையான இடத்தைக் கிரையமாகப் பெற்று 20 அடி அகலத்தில் சுமார் ஒன்னேகால் கிலோ மீட்டருக்கு தனது சொந்தப் பணம் 12 லட்ச ரூபாயை செலவு செய்து சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார். 

பணிகள் அனைத்தும் முடியும் பட்சத்தில் சாத்தநத்தம் கிராமமக்கள் 5 கிலோமீட்டர் பயணித்து வேப்பூர் செல்லும் நிலைமாறி தற்போது ஒருகிலோ மீட்டர் தூரத்திலே சென்றடையலாம். இதன் மூலம் அப்பகுதி மக்களில் சுமார் 100 ஆண்டுகள் கனவான குறுக்குவழி சாலை அமைக்கும் திட்டம் நிறைவேறியுள்ளது அப்பகுதி மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. விரைவில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சாலை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது. அதனை வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை திறந்துவைத்தார்.

சொந்த செலவில் இணைப்புசாலை அமைத்துத் தந்துள்ள பணியை மக்கள் பாராட்டி வரும் நேரத்தில் அவரிடமே கேட்டோம் இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி உதயமானது என்று,

"தேர்தலின்போது இந்தகவுன்சில் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு ஓட்டு கேட்டு போகும் போது இணைப்பு சாலை திட்டத்தை என்னிடம் நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தனர். வெற்றி பெற்றால், அரசு உதவியைக் கூட எதிர்பார்க்காமல் இத்திட்டத்தை நிறைவேற்றுவது என்று முடிவு செய்திருந்தோம் அதேபோன்று என்னை மக்கள் வெற்றி பெற வைத்தனர். ஒன்றியக் குழு உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு சாலைப் பணியை நிறைவேற்றுவதற்கு கடும் முயற்சி செய்தேன். 

இதில் சம்பந்தப்பட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் பலமுறை நேரடியாகச் பேசி அவர்களைச் சம்மதிக்க வைத்தோம். இடம் கொடுத்த சிலருக்குப் பணம் கொடுத்தோம் சிலருக்கு மாற்று இடம் வாங்கிக் கொடுத்தோம் இப்படிச் சாலைக்காக நிலம் வாங்கப்பட்டது. இந்தச் சாலை 21 அடி அகலமும் ஒன்றே கால் கி.மீ(1,300 மீட்டர்) நீளம் கொண்டது. சாலைப் பணி முடிந்து திறந்து வைத்த பிறகு இதைப் பயன்படுத்தும் எங்கள் கிராம மக்கள் மிகவும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக உள்ளனர். 

அதுவே எங்களுக்கு பெரும் சந்தோஷமாக உள்ளது இது மட்டுமல்ல கிராமங்களை இணைக்கவும் விவசாய நிலங்களுக்குச் சென்று வரவும் சுமார் மூன்றரை கிலோமீட்டர் தூரம் இரண்டு பேர் நடந்து செல்லக்கூடிய அளவுக்கு குறுகிய பாதையாக இருந்ததை இப்போது 10 அடி அகல சாலையாக மாற்றி சொந்தச் செலவில் புனரமைத்துள்ளோம். 

சொந்தமாக விவசாயிகளிடமிருந்து நிலம் வாங்கி அமைக்கப்பட்டுள்ள சாலையை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்க உள்ளோம் அதன் பிறகு அதைத் தார்ச்சாலையாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார் தமிழரசி அருள்.

இவரை முன் உதாரணமாகக் கொண்டு மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இது போன்று செயல்பட்டால் கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காணப்பட்டு மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிவிடும் என்பதில் ஐயமில்லை. உள்ளாட்சியில் சிறந்த மக்கள் பிரதிநிதிகளில் தமிழரசி போன்றவர்கள் பலர் உருவாக வேண்டும். மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் தமிழரசி அருள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments