ஆன்லைனில் உணவு தருவதுபோல் வீடு வீடாக கஞ்சா வினியோகம் செய்த பெண்.!இரு சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா விற்பனை செய்து வந்த சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


சென்னை,கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை கனஜோராக நடப்பதாக சென்னை, கிண்டி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் கிண்டி – வேளச்சேரி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

அந்த வழியே இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த ஒரு பெண்ணை மடக்கி, போலீசார் சோதனை செய்துள்ளனர். போலீஸ் டீம் சின்னமலை பகுதியில் மடக்கிய பெண்ணுடைய பேக்கில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். வனிதாவுக்கு கஞ்சா கொடுத்து அனுப்பிய பெண் குறித்து விசாரணை நடக்கின்றது. வனிதாவின் செல்போனில் கஞ்சா பொட்டலங்கள் யாருக்கெல்லாம் டெலிவரி செய்ய வேண்டும் என்ற விவரமும் இருந்துள்ளது.

போலீஸார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அவரது பெயர் வனிதா என்பதும், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர், பகுதி நேர கால் டாக்சி டிரைவராகவும், உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி-இல் உணவு டெலிவரி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். கால்டாக்சி டிரைவராக செல்லும் போது வனிதாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக கஞ்சா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

உணவு டெலிவரி செய்யச் செல்லும்போது, கஞ்சாவை அதற்குரிய பையில் மறைத்துக் கொண்டு போனால் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்கும் என எண்ணி இந்த தொழில் செய்து வந்ததாக, அவர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் வனிதா கூறியுள்ளார். வனிதாவிடம் இருந்து 2 செல்போன்கள், 500 ரூபாய் பணம் மற்றும் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனிதா-வுடன் தொடர்பு கொண்டிருந்த மற்றொரு பெண் தேடப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பெண் ஒருவர், கஞ்சா வழக்கில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a comment

0 Comments