புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 22,467 பேர் தேர்ச்சி.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 22 ஆயிரத்து 467 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதனை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிப்போனது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 

தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 80 சதவீத அடிப்படையிலும், வருகைப்பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் அளிக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் பட்டியலை வைத்து மதிப்பெண்கள் கணக்கிடும் பணி நடந்தது. இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 333 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 191 மாணவர்களும், 11 ஆயிரத்து 276 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 467 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதம் 100 சதவீதம் ஆகும். 

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 250 மாணவர்களும், 4 ஆயிரத்து 432 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 682 பேரும், 

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 638 மாணவர்களும், 3 ஆயிரத்து 543 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 181 பேரும், 

இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 303 மாணவர்களும், 3 ஆயிரத்து 301 மாணவிகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 604 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அனைவரும் தேர்ச்சி என்பதால் 333 பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 214 அரசு பள்ளிகள், 3 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், 31 அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு நகராட்சி பள்ளி, 11 சுயநிதி பள்ளிகள், 73 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆகும்.

தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டன. இதனை மாணவர்கள் பார்த்து தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர். இதேபோல பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. அதனை பள்ளிக்கு அருகில் உள்ள மாணவர்கள் சென்று மதிப்பெண்களை பார்த்தனர்.

Post a Comment

0 Comments