தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நீங்கள் சேர ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.. நம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ..!




குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை 2020-21-ம் கல்வியாண்டிற்கு சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளிக் கல்வித்துறையின் rte.tnsc-h-o-ols.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் ஆசிரியர்களின் உதவியுடன் மேற்கண்ட இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியாக விண்ணப்பிக்க நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிறப்புச்சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல், பெற்றோர் அல்லது பாதுகாவலரால் வயது நிரூபிக்க எழுத்து மூலம் அளிக்கப்பட்ட உறுதி மொழி ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். 

குழந்தையின் வயதை நிரூபிப்பதற்கான ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி. சேர்க்கைக்கு 31.7.2020 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். முதலாவதாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர்களான ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள், மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகள் போன்றவர்களிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இன்றிச் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் உள்ள அனைத்து பிரிவினரும் நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மனுதாரரின் இருப்பிடத்திலிருந்து பள்ளி அமைவிடம் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments