ஆலங்குடி அருகே நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை..



ஆலங்குடி அருகே ‘நீட்’ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஹரிஷ்மா (வயது 17). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

மருத்துவராக விரும்பிய இந்த மாணவி ‘நீட்’ தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தார். இந்தநிலையில் அவருடன் இணைந்து விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துவிட்டது. ஆனால் ஹரிஸ்மாவிற்கு ஹால்டிக்கெட் வரவில்லையாம்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த, அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மாணவியின் தந்தை கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திறமையான மாணவியான ஹரிஷ்மா, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராவேன், என்ற கனவில் இருந்து வந்ததாகவும், இந்த கனவை தனக்கு தெரிந்த அனைவரிடமும் கூறி வந்ததாக உறவினர்களும், அவருடைய ஆசிரியர்களும் தெரிவித்தனர். ‘நீட்’ தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்காமல் மாணவி ஹரிஷ்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments