புதுக்கோட்டையில் தக்காளி விலை ‘கிடு கிடு’ உயர்வு.!புதுக்கோட்டையில் தக்காளி விலை ‘கிடு கிடு‘ வென உயர்ந்து கிலோ ரூ.50 வரை விற்பனையாகிறது.

புதுக்கோட்டைக்கு தக்காளி வரத்து கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. இதனால் அதன் விலை ‘கிடு கிடு‘ வென உயர்ந்துள்ளது. இதனால், கடைகளில் கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனை கடைகளில் சற்று கூடுதலாக விற்கப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40-க்கு விற்றது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரி உள்பட மாவட்டங்களில் இருந்து தக்காளி மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில் மழையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அதன் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கேரட், பீன்ஸ் போன்ற இங்கிலீஷ் காய்கறிகளின் விலைகளும் சற்று உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் சந்து அருகே உள்ள மார்க்கெட்டில் ஒரு கடையில் விற்பனையான காய்கறிகளின் விலைகள் விவரம் கிலோ கணக்கில் வருமாறு:-

கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.70, அவரைக்காய் ரூ.50, உருளைகிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.20, சவ்சவ் ரூ.20-க்கு விற்பனையானது.

இதேபோல உழவர் சந்தையிலும் காய்கறிகள் விலை சற்று உயர்ந்துள்ளது. கத்திரிக்காய் ரூ.50-க்கும், வெண்டைக்காய் ரூ.26-க்கும், புடலங்காய் ரூ.20-க்கும், பீர்க்கங்காய் ரூ.40-க்கும், பச்சைமிளகாய் ரூ.60-க்கும், குடைமிளகாய் ரூ.80-க்கும், முள்ளங்கி ரூ.30-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும், கருணைக்கிழங்கு ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.56-க்கும், பெரிய வெங்காயம் ரூ.34-க்கும் விற்றது. காய்கறிகள் விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

0 Comments