திருமயம் அருகே பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள சந்தன விடுதி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் விமல் (வயது 10). அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்கிற கருப்பையா என்பவரது மகன் அன்பு (8). இருவரும், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் சிறுவர்கள் இருவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களை திடீரென காணவில்லை. அவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் சென்று தேடினர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

பின்னர், அருகே உள்ள வயல் பகுதிக்கு சென்று தேடிப் பார்த்தனர். அங்கு தோண்டப்பட்ட ஒரு பள்ளத்தின் அருகே சிறுவர்கள் பயன்படுத்திய செருப்பு கிடந்தது. அந்த பள்ளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தது. அதனைத்தொடர்ந்து ஒரு சிறுவனின் தாயார் பள்ளத்திற்குள் இறங்கி தேடிப் பார்த்தபோது அன்பு மற்றும் விமல் இருவரும் நீரில் மூழ்கி இறந்து கிடந்தனர். பின்னர், அவர்களது உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் இருவரும் அவர்களது குடும்பத்திற்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் இறங்கி அவர்கள் விளையாடிய போது இந்த துயர சம்பவம் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments