புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கு ரூ.3½ கோடியில் அதிநவீன கருவி.!



புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கு ரூ.3½ கோடியில் அதிநவீன கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது என்று மருத்துவ துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சைக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் நவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப்பிரிவில் அதிநவீன கருவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்தது.

அந்த கருவியை பொருத்தி இணைப்பு கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தும் பணி நடந்து வந்தது. தற்போது இந்த பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், இதய நோயினை கண்டறியும் மற்றும் சிகிச்சைக்காக ரூ.3½ கோடியிலான அதிநவீன கருவியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘கேத் லேப்‘ எனப்படும் இந்த சிகிச்சைப்பிரிவு தனியாக இயங்கும். இதற்கு பிரத்யேகமாக டாக்டர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டைக்கு வரும்போது இந்த சிகிச்சை பிரிவை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள இந்த சிகிச்சை பிரிவு, இதய நோயாளிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்“ என்றனர்.


Post a Comment

0 Comments