புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதியில் பிரான்மலையை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்.!



பொன்னமராவதியை அடுத்துள்ள பிரான்மலையில் சமய ஒற்றுமைக்கு சான்றாக வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. மேலும், சங்க இலக்கியத்தில் பாரி ஆட்சி செய்த பறம்புமலைதான் காலத்தால் திரிந்து பிரான்மலை என்று அழைக்கப்படுவதாக தொல்லியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பிரான்மலையை பாதுகாக்க கோரியும், கனிம வளங்களை தனிநபர்கள் கொள்ளையடிப்பதாகவும், அதனை தடுத்து நிறுத்த கோரியும் அரசியல் கட்சியினர் சார்பில் புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ்அகமது தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர், சி.ஐ.டி.யு.வினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். 

பொன்னமராவதியில் ஆர்ப்பாட்டம்:-

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பறம்பு மலை பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் முத்துராமன் தலைமை தாங்கினார். 

இதில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மே 17 இயக்கம், எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, சி.ஐ.டி.யு. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Post a Comment

0 Comments