புதுக்கோட்டை மாவட்டத்தில் 4.56 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு.. கலெக்டர் உமாமகேஸ்வரி தகவல்.!



4.56 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி மாத்திரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 4 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கொக்கிபுழு, உருண்டைபுழு, சாட்டைபுழு போன்றவை சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தின் மூலம் பரவுகிறது. அதிகமான புழு தொற்று இருந்தால் வயிறுவலி, பசியின்மை, உடற்சோர்வு, ரத்தசோகை போன்ற அறிகுறிகள் ஏற்படும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், கழிவறையை பயன்படுத்துதல், காய்கறிகளை கழுவிய பின்பு சாப்பிடுதல், சுத்தமான குடிநீரினை பயன்படுத்துதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல், காலணிகளை அணிதல், உணவுக்கு முன்னும், கழிவறையை பயன்படுத்திய பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் குடற்புழு தொற்றினை தடுக்கலாம்.

மேலும் குடற்புழு நீக்க மாத்திரை 1 முதல் 2 வயதினருக்கு ½ மாத்திரையும், 2 முதல் 19 வயதினருக்கு 1 மாத்திரையும் குடற்புழு தொற்று நீக்க மருந்தாக வழங்கப்படுகிறது. இதனால் ரத்தசோகை குறைந்து ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் அடைகிறது. இம்மாத்திரை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கான்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது. 

எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும், நினைவாற்றல், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தி ஆரோக்கியமாக இருக்கவும் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரையை கட்டாயம் வழங்க வேண்டும். மேலும் இம்முகாமில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் ரேணுகா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மரிய லூயிஸ் பெக்கி ஹோம்ஸ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments