புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக 129 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக 129 ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்பட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் முறைகேட்டை தடுப்பதற்காக பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,019 ரேஷன் கடைகளில் முதல் கட்டமாக 129 கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளன. இதிலும் சோதனை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. படிப்படியாக மற்ற ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஒருவரை ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பினால், அவரது கைவிரல் ரேகையை பயோ மெட்ரிக் கருவியில் பதிவிட வேண்டும். இதனால் வேறு நபர்களின் கார்டு மூலம் ஒருவர் ரேஷன் பொருட்கள் வாங்கும் முறைகேடு தடுக்கப்படுகிறது. 

குடும்ப அட்டைதாரர் உறுப்பினரது விரல் ரேகையை கருவியில் வைக்கப்படும் போது, ஆதார் எண்ணுக்கு பெறப்பட்ட ரேகையுடன் இணையதளம் உதவி கொண்டு சரிபார்க்கப்படும். அதன்பின்பு எப்போதும் போன்று விற்பனை தொடரப்படும். கைவிரல் ரேகை தோல்வி அடைந்தால் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவு சொல் அனுப்பப்படும். அதனை வைத்து பொருட்களை பெறலாம் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறினர்.

இதற்கிடையில் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகிக்கப்படுவது குறித்து செயல் விளக்கத்தை அத்துறையை சேர்ந்த அதிகாரிகள், கலெக்டர் உமாமகேஸ்வரி முன்னிலையில் செயல் விளக்கம் அளித்தனர். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Post a Comment

0 Comments