கரூரில் திருடப்பட்ட மூன்று இருசக்கர வாகனங்களை சினிமா பாணியில் சில மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசார்.! புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி பாராட்டு.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் சினிமா பாணியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் திருடப்பட்ட மூன்று இருசக்கரவாகனங்கள் சில மணி நேரத்தில் மீட்கப்பட்டதால் சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு புதுக்கோட்டை எஸ்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேற்று 16.09.2020 இரவு கரூர் மாவட்டத்தில் இருந்து இருசக்கரவாகனத்தை (புல்லட்) திருடிக் கொண்டு புதுக்கோட்டை நோக்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் இலுப்பூர் அருகே பல்சர் வாகனம் மற்றும் குழிப்பிறை அருகே ஹோண்டா டியோ ஆகிய மூன்று இருசக்கரவாகனங்கள் அடுத்தடுத்து திருடு போனதாக தொடர்ந்து கிடைத்த தகவலின் பேரில் புதுக்கோட்டை ஏடிஎஸ்பி. ராஜேந்திரன் புதுக்கோட்டை காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் புதுக்கோட்டை மாவட்ட இரவு ரோந்து அதிகாரி மாவட்ட குற்ற ஆவணக் கூடம் டிஎஸ்பி. சோமசுந்தரம் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இரவு ரோந்து அதிகாரிகளையும் அறிவுறுத்தியதன் பேரில் அனைத்து இடங்களிலும் வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டது.

இதற்கிடையே புதுக்கோட்டை மாலையீடு அருகில் காவல்துறையை கண்டவுடன் நிற்காமல் வேகமாக சென்றவர்களை காவல்துறையினர் துரத்தி சென்ற போது அவர்கள் பொன்னமராவதி நோக்கி வேகமாக சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க நகர அதிகாரிகள் சினிமா பாணியில் பின்னால் துரத்தி சென்றுள்ளனர். 


மேலும் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் பொன்னமராவதி பூலாம்பட்டி அருகே பனையப்பட்டி காவல் ஆய்வாளர் பத்மா தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் கரூர் மாவட்டம் அருகாம்பாலையத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் ஆகாஷ் என்பவரை புதுக்கோட்டை நகர அதிகாரிகளின் உதவியுடன் காவல் துறையினர் விரட்டி பிடித்தனர். மற்ற 5 நபர்கள் வாகனத்தை போட்டு விட்டு தப்பித்து ஓடியுள்ளனர். பிடிபட்ட ஆகாஷ் என்பவரிடமிருத்து 1) TN 49 AJ 9448 (Royal Enfield), 2) TN 55 BB 5730 (DIO), 3) TN 55 AR 6955 (Pulsar ஆகிய மூன்று இரு சக்கரவாகனங்களை கைப்பற்றியுள்ளனர்.

தப்பிச் சென்ற மற்ற குற்றவாளிகளை காவல்துறை தனிப்படையினர் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில் பிடிபட்ட ஆகாஷ் மீது கரூர் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

மேற்படி திருடு போன மூன்று இருசக்கரவாகனங்களை திருடப்பட்ட 5 மணிநேரத்திற்குள் கைப்பற்றியும், குற்றவாளியை பிடிக்க துரிதமாக செயல்பட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் ஏடிஎஸ்பி ராஜேந்திரன், டிஎஸ்பி சோமசுந்தரம், காவல் ஆய்வாளர்கள் பத்மா, அழகம்மாள், உதவிஆய்வாளர்கள் குணசேகரன் மற்றும் பிரகாஷ் ரோந்து காவலர்கள் செபாஸ்டீன் மற்றும் மணிகண்டன் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன் நற்பணி சான்றிதழ்கள் வழங்கி வெகுவாக பாராட்டி சிறப்பித்தார்.






Post a Comment

0 Comments