புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தமிழ்நாடு அரசு கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டிற்கு விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் கிராமங்கள் தோறும்

வீட்டின் புறக்கடையில் கோழி வளர்ப்பதற்கு, ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியங்களில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ள அனைத்து வகுப்பை சேர்ந்த 5, 200 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. 

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் கிராமப்புற பெண்களாவும், கிராம ஊராட்சிகளில் நிரந்தர குடியிருப்பில் வசிப்பவராகவும், பி.பி.எல். எண் வைத்திருப்பவராகவும் இருத்தல் வேண்டும். 

மேலும் விதவைகள், ஆதரவற்றவர்கள், திருநங்கைகள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கிராம ஊராட்சியை சேர்ந்த பயனாளிகளில் 30 சதவீதத்தினர் கட்டாயமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யும் பயனாளிகளில் 1 பயனாளிக்கு 25 கோழி குஞ்சுகள் 4 வார வயதில் வழங்கப்படும். 

தேர்வு செய்யும் பயனாளிகள் இதற்கு முன் இத்துறை சார்ந்த விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் கோழி வளர்ப்புத் திட்டத்தின்கீழ் பயனடைந்திருக்க கூடாது. 

எனவே, இந்த தகுதிகளை கொண்ட பயனாளிகள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பம் அளிக்கலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments