சிஏஏவுக்கு எதிராக ஷாகீன் பாக்கில் போராடிய 82 வயது மூதாட்டி: ‘டைம்’ இதழின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்...



மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்திய 82 வயது மூதாட்டி பில்கிஸ், டைம் இதழின் 2020 ஆம் ஆண்டுக்கான தாக்கத்தை ஏற்படுத்திய 100 தலைவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த என்ஆர்சி, சிஏஏ சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இதில் டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ந்து முஸ்லிம்கள், சமூக ஆர்வலர்கள் ஜனவரி மாதத்திலிருந்து போராட்டம் நடத்தினர்.

கரோனா வைரஸ் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் போராட்டம் முடிவுக்கு வந்தது. கடைசியாக மார்ச் 24-ம் தேதி வரை ஷாகீன் பாக் பகுதியில் போராட்டக்காரர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்து, மார்ச் 24-ம் தேதிவரை 82 வயதான மூதாட்டி பில்கிஸ் பாட்டி மற்றும் அவரின் இரு தோழிகள் பங்கேற்றார்கள். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பில்கிஸை அங்கிருந்தவர்கள் அனைவரும் ஷாகீன் பாக் தாதி (பாட்டி) என்று அன்பாக அழைத்தனர்.

காலை 8 மணிக்குப் போராட்டக் களத்துக்கு வரும் பில்கிஸ், நள்ளிரவுவரை இருந்துவிட்டு அதன்பின் தனது தோழிகளுடன் வீட்டுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் டைம் இதழ், 2020 ஆம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 தலைவர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. ஷாகீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்ட 82 வயது மூதாட்டி பில்கிஸ் பாட்டியின் பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் போராட்டம் குறித்து பில்கிஸ் அளித்த பேட்டியில் கூறுகையில், “ இந்தப் போராட்டம் எங்கள் உரிமைக்கானது. குறிப்பாக எங்கள் குழந்தைகளுக்கானது. சிஏஏ சட்டம் திரும்பப் பெறும் வரை ஓயமாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.

டைம் இதழின் உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், பேராசிரியர் ரவீந்திர குப்தா, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டைம் இதழில் பில்கிஸ் பாட்டியின் பெயர் இடம் பெற்றது குறித்து ஷாகின் பாக்கில் 3 மாதங்கள் போராடிய ஹெனா அகமது கூறுகையில், “எங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதற்கு மகிழ்ச்சி. நாங்கள் செய்த போராட்டத்தை தவறாகச் சித்தரிக்க அதிகாரிகள் முயன்றார்கள்.

உண்மை எப்போதும் வெல்லும். நம்முடைய பிரதமர் மோடியின் பெயருடன் சேர்ந்து பில்கிஸ் பாட்டியின் பெயரும் டைம் இதழில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் எங்கள் போராட்டத்துக்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஷாகீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments