புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 இடங்களில் வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்.!



வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 438 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர், கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் நேற்று காலை திரண்டனர்.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் டவுன் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன் (டவுன்) , கவுரி (திருக்கோகர்ணம்) மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோமையா தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். மேலும் பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் கோரிக்கைகள் குறித்து பேசினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். 

இந்த போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் வேளாண் மசோதாக்களின் நகலை சிலர் கிழித்தெறித்தனர். புதிய மசோதாக்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

இந்த போராட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை போலீசார் வேனில் ஏற்றி அருகில் உள்ள ஆயுதப்படை திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டு சென்றதால், அவர்கள் கைதாகவில்லை என போலீசார் கூறினர்.

கீரனூரில் காந்தி சிலை முன்பு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 6 பெண்கள் உள்பட 37 பேர் கைது செய்யப்பட்டனர். அன்னவாசலில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் ரெங்க சாமி தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். இதில் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் 41 ஆண்கள், 28 பெண்கள் என மொத்தம் 69 பேர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடியில் தி.மு.க. விவசாயிகள் சங்கம் சார்பில் தெட்சிணாமூர்த்தி தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்கம் சார்பில் சுப்பிரமணியன் தலைமையிலும், காங்கிரஸ் விவசாயிகள் சங்கம் சார்பில் கென்னடி தலைமையிலும், ம.தி.மு.க.விவசாயிகள் சங்கம் சார்பில் செல்வம் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு விவசாயிகள் சங்கம் சார்பில் செல்வராசு தலைமையிலும், சி.பி.ஐ.எம்.எல் சார்பில் சரவணன் தலைமையிலும் ஆலங்குடி சந்தைப்பேட்டையிலிருந்து ஊர்வலமாக மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு வடகாடு முக்கத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆவுடையார்கோவில் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணைச் செயலாளர் கண்ணன் முன்னிலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் சீனிகடை முக்கத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 40 பேர் கைது செய்யப்பட்டனர். கந்தர்வகோட்டை பஸ்நிலையம் அருகே விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமையன் தலைமையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி பஸ்நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 69 பேர் மீது அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 59 பெண்கள் உள்பட 438 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments