நாகுடியில் தடையில்லா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளா் கைது.!!அறந்தாங்கி அருகே தடையில்லா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடியில் கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் தென்னரசு (வயது 45). 

இந்தநிலையில், அறந்தாங்கியை சேர்ந்த விவசாயி பிரபாகரன், தனது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்திருந்தார். 

அதற்கு கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் வாங்கி வரும்படி மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பிரபாகரன், அந்த அலுவலகத்தை நாடினார்.

அப்போது அங்கு பணியில் இருந்த உதவி என்ஜினீயர் தென்னரசு, தடையில்லா சான்றிதழ் வழங்க பரிந்துரைக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு பிரபாகரனிடம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் நாகுடிக்கு சென்று மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து என்ஜினீயர் தென்னரசுவிடம், பிரபாகரன் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று தென்னரசுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சமாக வாங்கிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். கைதான அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் உதவி பொறியாளர் தென்னரசு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments