மல்லிப்பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் கஞ்சா பறிமுதல்.! புதுக்கோட்டையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!!



தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 170 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மல்லிப்பட்டினம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தஞ்சாவூர் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மல்லிப்பட்டினம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் கியூ பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது , மல்லிப்பட்டினம் அருகே உள்ள வெளிவயல் கடல் பகுதியிலிருந்து நான்கு நாட்டிக்கல் மைல் தொலைவில் கண்ணாடி இழைப் படகு நின்றுள்ளது. அதை சோதனையிட்ட போலீசார், தலா 2 கிலோ எடையுள்ள 85 கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனர். அவை இலங்கைக்கு கடத்த இருந்ததை அடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து படகில் இருந்த அதிராம்பட்டினம்,கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நாகூரான் மகன் குமார் (38), அதே பகுதியைச் சேர்ந்த வீரையன் மகன் கிருஷ்ணமூர்த்தி (35), புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், புதுக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த கந்தன் (50) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தபர். கைது செய்யப்பட்டுள்ள குமார் படகின் உரிமையாளர் ஆவார். 

பறிமுதல் செய்யப்பட்டுள்ள 175 கிலோ கஞ்சா மதுரையிலிருந்து தரை வழியாக மணல்மேல்குடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கிருந்து கடல் வழியாக கொண்டுவரப்பட்டு அலையாத்திக்காடுகள் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றும்போது போலீஸார் சுற்றிவளைத்து பிடித்து பறிமுதல் செய்தனர்.

போலீஸ் முதற்கட்ட விசாரணையில், மதுரை எல்லிஸ் நகரைச் சேர்ந்த சிலோன் சேகர் என்ற சேகர் (60) என்பவர் இந்த பொட்டலங்களை மணல்மேல்குடிக்கு தரை மார்க்கமாக கொண்டுவந்து குமாரிடம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சேகரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரத்திற்கு அழைத்து வரப்பட்ட கடத்தல்காரர்களை க்யூ பிரிவு போலீஸார் விசாரணைக்கு பின், சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றிய கஞ்சாவின் மொத்த எடை 175 கிலோ என்றும் அதன் மதிப்பு ரூ 15 லட்சம் என்றும் போலீசார் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments