ஆவுடையார்கோவில் அருகே குழந்தைகளுடன் மாயமான மனைவி கிடைக்காததால் தற்கொலை முயற்சி.. தூக்கு கயிறு அறுந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு.!!ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா ஓரியூர் அருகே உள்ள உப்புக்கோட்டை தோப்பை சேர்ந்தவர் பிரபு என்ற ராஜேஷ்குமார் (வயது 29).

இவர் ஆவுடையார் கோவில் அருகே உள்ள கலபம் கிராமத்தை சேர்ந்த ரேகா (28) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்த ரேகாவை கடந்த 2 ஆண்டுகளாக காணவில்லை. ராஜேஷ்குமார் மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த ராஜேஷ் குமார் நேற்று ஆவுடையார் கோவில் பாபா கோவில் அருகே உள்ள ஒரு கொட்டகையில் தூக்குப்போட முயற்சித்துள்ளார். அப்போது, கயிறு அறுந்ததில் கீழே விழுந்த ராஜேஷ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து ராஜேஷ்குமாரின் தாய் மாமன் நரிக்குடியை சேர்ந்த வேலுச்சாமி ஆவுடையார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments