புவனகிரி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்து அவமதிப்பு.. பெண் ஊராட்சி செயலாளர் கைது.!



புவனகிரி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்து அவமதித்த சம்பவம் தொடர்பாக பெண் ஊராட்சி செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டையை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றார். அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் துணைத் தலைவராக உள்ளார்.
மோகன்ராஜ்

இந்த நிலையில் தெற்கு திட்டை ஊராட்சியில் நடைபெறும் மாதாந்திர கூட்டம் மற்றும் குடியரசு தினம், சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்படும் கூட்டங்களிலும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர்ந்து கூட்டம் நடத்த வேண்டும் என்று துணைத்தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகியோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதன்படி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி மட்டும் ஊராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கூட்டம் நடத்தியுள்ளார். அவரை தவிர மற்ற அனைவரும் அங்கு போடப்பட்டுள்ள நாற்காலியில் அமர்ந்துள்ளனர். இதுபோல் அவர் பலமுறை ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரால் அவமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர்ந்து கூட்டம் நடத்துவதும், அவருக்கு மதிப்பு கொடுக்காமல் மற்ற அனைவரும் நாற்காலியில் அமர்ந்திருப்பதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட சம்பவம் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து துணை தலைவர் மோகன்ராஜ், செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளின் கீழ் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்துஜாவை கைது செய்தனர். மேலும் மோகன்ராஜை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று தெற்கு திட்டை ஊராட்சிக்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஊராட்சி மன்ற தலைவரிடமும் விசாரித்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சிந்துஜா

இதையடுத்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பரிந்துரையின் பேரில் தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை, புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments