கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து புதுக்கோட்டையில் 22-ம் தேதி முதல்வர் எடப்பாடி ஆய்வு
புதுக்கோட்டை : கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 22-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார்.

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் மக்களின் நலனுக்காக  பல்வேறு தளர்வுகள் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். 


 
அதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது  போன்றவற்றை பின்பற்றினால் மட்டும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் பலர் இந்த விதிகளை பின்பற்றுவதில்லை. குறிப்பாக வணிக இடங்களில் தனிமனித இடைவெளியை  பின்பற்றாமல் பலர் கூட்டமாக பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

இவ்வாறு விதிகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. புதிய கொரோனா தடுப்பு சட்டத்தின் கீழ் பொது இடங்களில் முக கவசம் தனி மனித இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பின்பற்றாத தனி நபருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் கொரோனா பாதிப்பு குறைந்ததாக இல்லை.

அதனால் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.  இதுவரை கிட்டத்தட்ட 15 மாவட்டங்களுக்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதை தொடர்ந்து பல்வேறு தொழில்முனைவோர்களுடனும், விவசாய பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 


 
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதற்கு முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு 7,528 பயனாளிகளுக்கு ரூ.51.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதனை தொடர்ந்து கடந்த 13-ம் தேதி முதல் தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்வதாக இருந்தது. இந்த நிலையில் முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 13-ம் தேதி காலமானதை அடுத்து அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.  

இந்த நிலையில் வரும் 22-ம்  தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்துகிறார். இந்த தகவலை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

அன்றைய தினம் விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பினர் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். மேலும்  பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற திட்டங்களையும் முதல்வர் திறந்து வைக்கிறார். ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வழங்குகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments