அறந்தாங்கியில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலைக்கு சென்றுவந்த அரசு பஸ்கள் நிறுத்தம்
அறந்தாங்கி: அறந்தாங்கி பகுதியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் சப்தம் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராக அறந்தாங்கி நகரம் விளங்கி வருகிறது. கடந்த திமுக ஆட்சிக்கு முன்பு வரை அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் (தற்போது அரசு விரைவுப் போக்குவரத்து கழகம்) சார்பில் ஒரு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. அதேபோல அறந்தாங்கியில் இருந்து மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகம் (பின்னர் அது வீரன்அழகு முத்துக்கோன் போக்குவரத்துக் கழகம் என பெயர் மாறி, அதற்கு பிறகு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என மாற்றப்பட்டது) சார்பில் நீண்டதூரத்திற்கு செல்லும் நீண்டதூர பேருந்துகளாக அறந்தாங்கியில் இருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சிவரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. பின்னர் அறந்தாங்கியில் இருந்து திருநெல்வேலிக்கு நீண்டதூரம் செல்லும் பேருந்து இயக்கப்பட்டது.

மருதுபாண்டியர் போக்குவரத்து கழகத்தில் இருந்து புதுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு வீரன் அழகுமுத்துக்கோன் போக்குவரத்து கழகம் பிரிக்கப்பட்டபோது, அறந்தாங்கியில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்தை காரைக்குடியை தலைமையிடமாக கொண்ட மருதுபாண்டியர் போக்குவரத்து கழகம் எடுத்துக் கொண்டு, அதற்கு பதிலாக காரைக்குடியில் இருந்து ஈரோடு வரை இயக்கப்பட்டு வந்த பேருந்தை வீரன் அழகுமுத்துக்கோன் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கி, அந்த பேருந்து அறந்தாங்கியில் இருந்து ஈரோடு வரை தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது.

அறந்தாங்கி நகரம் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில், இப்பகுதியில் மீன்பிடித் தொழில், விவசாயத்தொழிலும் நன்றாக வளர்ச்சி அடைந்தது. மேலும் கிராமப்புற மாணவர்களும் நீண்ட தூரத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று கல்வி பயில தொடங்கினர். மேலும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் வெளியூர்களுக்கு சென்று, வேலை பார்க்க தொடங்கினர். இதனால் நாள்தோறும் ஏராளமான மக்கள், இதன்விளைவாக அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் அறந்தாங்கியில் இருந்து நீண்டதூரத்தில் உள்ள வெளிநகரங்களுக்கு செல்லவதற்கு பல்வேறு ஊர்களில் இறங்கி, அடுத்த பேருந்துகளில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு அதிக செலவும், கால விரயமும் ஏற்பட்டது. மேலும் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் இறங்கி ஏறி சென்றதால், அவர்கள் பல்வேறு பிரச்னைக்கு உள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து சில ஆண்டுகளில் அறந்தாங்கியில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியின்போது, அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவராக இருந்த கைலாசநாதன் முயற்சியால், அறந்தாங்கியில் இருந்து திருப்பூருக்கும், அறந்தாங்கியில் இருந்து கோயமுத்தூருக்கும் நீண்டதூரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் அறந்தாங்கி திமுக எம்.எல்.ஏவாக இருந்த உதயம்சண்முகம் முயற்சியால் மீமிசலில் இருந்து சென்னைக்கும், மீமிசலில் இருந்து திருப்பூருக்கும், அறந்தாங்கியில் இருந்து மேலும் 2 பேருந்துகள் திருப்பூருக்கும் இயக்கப்பட்டன. அதேபோல மணமேல்குடியில் இருந்து கட்டுமாவடி வழியாக பழனிக்கும், பழனியில் இருந்து அறந்தாங்கிக்கும் அரசு நீண்டதூரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் பல குக்கிராமங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அறந்தாங்கி தொகுதி அப்போதைய அதிமுக எம்.எல்.ஏ ராஜநாயகத்தின் கோரிக்கையை ஏற்று, அறந்தாங்கியில் இருந்து வேலூர், மேட்டுபாளையம், குமுளி, திருச்செந்தூருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கினார். அதேபோல நாகுடி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவிலில் இருந்து சென்னைக்கும், ஆவுடையார்கோவிலில் இருந்து திருப்பதிக்கும் கடந்த ஆட்சி காலத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்யன. அதேபோல நாகர்கோவிலில் இருந்து அறந்தாங்கி வரை நீண்டதூரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஆனால் தற்போது நடக்கும் அதிமுக ஆட்சியில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது இயக்கப்பட்ட நாகுடி, மணமேல்குடியில் இருந்து இயக்கப்பட்ட சென்னை பேருந்து, ஆவுடையார்கோவிலில் இருந்து இயக்கப்பட்ட திருப்பதிக்கு செல்லும் பேருந்து, அறந்தாங்கியில் இருந்து வேலூர் சென்ற பேருந்து என பல பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் நிறுத்திவிட்டது. மேலும் பல வழித்தடங்களில் தனியார் பேருந்துகளுக்கு உதவிடும் வகையில் ஏற்கனவே இயக்கப்பட்ட பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் நிறுத்தி வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இயக்கப்பட்ட பல நீண்டதூர பேருந்துகளை தற்போதைய அதிமுக ஆட்சியில், அதுவும் அதிமுகவை சேர்ந்த ரத்தினசபாபதி எம்.எல்.ஏவாக உள்ள அறந்தாங்கி தொகுதியில் நிறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது: அறந்தாங்கி தொகுதியிலும் ஏராளமான பேருந்துகள் புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்டன. குறிப்பாக சென்னை, திருப்பதி, வேலூர் உள்ளிட்ட பல வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் தற்போது நடக்கும் அதிமுக ஆட்சியில், கடந்த ஆட்சியில் அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜியால் இயக்கப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மேலும் தற்போது அறந்தாங்கி பனிமனையில் இருந்து வேலூருக்கு இயக்கப்பட்ட பேருந்து தினசரி ரூ.30 ஆயிரம் வரை வசூல் செய்து வந்தது. அதிக வருவாய் தந்த அந்த பேருந்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நிறுத்தி உள்ளது.

ஏற்கனவே ஆவுடையார்கோவிலில் இருந்து திருப்பதிக்கு சென்ற அரசு விரைவு பேருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது திருப்பதிக்கு செல்ல இணைப்பு பேருந்துகளாக இருந்த, திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வதற்கு வாய்ப்பாக இருந்த வேலூர் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால், திருப்பதி, திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ஒரே பேருந்தில் செல்ல முடியாமல், ஒவ்வொரு பேருந்தாக மாறிச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை உடனே இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனவே அதிமுக ஆட்சியில் இயக்கப்பட்ட பேருந்துகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அறந்தாங்கி பகுதியில் இருந்து நிறுத்தப்பட்ட அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments