கீரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி நாடியம்மாள் (வயது 60). இவர் திருவள்ளுவர் மன்றம் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பனங்குளத்தில் இருந்து கீரமங்கலத்திற்கு, பனங்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்த சிவசுந்தரம் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற நாடியம்மாள் மீது மோதியது. இதில் நாடியம்மாள், சிவசுந்தரம் மற்றும் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெரியாளூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாடியம்மாள் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாடியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments