மாணவர்களுக்குக் குறைக்கப்பட்ட 40% பாடங்கள் எவை?- குழப்பத்தை தவிர்க்க உடனே அரசு அறிவிக்க வேண்டும்: ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை



மாணவர்களின் கல்வி நலன் கருதி குறைக்கப்பட்டுள்ள 40 சதவீதமான பாடங்கள் எவை என அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
  
“2020-21 ஆம் கல்வியாண்டில் மொத்த 210 வேலை நாட்களில், அக்டோபர் மாதம் இறுதி வரையில் கிட்டத்தட்ட 100 வேலை நாட்கள் முடிய உள்ளன. இந்நிலையில் பல மாதங்களாக பாடப்புத்தகத்தில் 40 சதவீதப் பாடங்கள் மாணவர்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.

ஆனால், குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? எந்தெந்தப் பாடங்களை மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த வெளிப்படையான தெளிவான அறிவிப்புகள் இன்று வரை வரவில்லை.

தனியார் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகத் தெரியவருகிறது. அதில் அனைத்துப் பாடங்களும் மாணவர்களுக்கு நடத்தப்படுவதாகத் தெரிகிறது.

ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அவர்களது குடும்பச் சூழலின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாத நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு அவர்களாகவே ஆசிரியரிடம் தொலைபேசி அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து படித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

நேரடியாக வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆதரவோடு படித்து வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குடும்பச் சூழல் காரணமாக இம்மாதிரியான கற்றல் பெரிய அளவிற்கு உதவி புரியவில்லை என்னும் எதார்த்தத்தை அரசு இன்னும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

அடுத்தபடியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து பொதுத் தேர்வுகளுக்கு அதிகமான வினாக்கள் கேட்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். பாடங்கள் எது என்பது தெளிவாகாத நிலையில் தேர்விற்குத் தயாராகவேண்டும் என்பது போன்ற அறிவிப்பினால் மாணவர்கள் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் கல்வித் தொலைக்காட்சி குறித்து தனியார் பள்ளி மாணவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்கும் அவர்களது வீட்டில் கல்வித் தொலைக்காட்சி தொடர்பு கிடைக்காத சூழல் நிலவி வருகிறது.

அரசு கேபிள் இணைப்பு பெற்ற குடும்பத்தில் மட்டுமே கல்வித் தொலைக்காட்சி வழங்கப்படுகிறது. வேறு சில தனியார் தொலைக்காட்சி இணைப்புகளைப் பெற்றிருப்பவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி அல்லது அந்த வகுப்பு ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பெய்டு சேனலாக இருப்பதனால் அதற்கான தொகையைக் கட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.

இம்மாதிரியான பல களச் சூழல்களை கணக்கில் கொள்ளாமல் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் விதமான பல அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்து வருவது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, மாணவர்களின் கல்வி நலன் கருதி குறைக்கப்பட்டுள்ள 40 சதவீதமான பாடங்கள் எவை என உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments