கட்டுமாவடியில் வெடி கடைக்கு சீல்.!!ஆலங்குடியில் நாட்டு வெடி வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்தார். கட்டுமாவடியில் வெடி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் கிட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது நண்பர் வீரா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜாவின் உறவினரைப் பார்த்து விட்டு நேற்று இருவரும் இச்சடி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக அருகே உள்ள பேக்கரிக்கு ராஜா சென்றார். 

அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த நாட்டு வெடி ஒன்று கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. வெடி சத்தத்தைக் கேட்டு பேக்கரியில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். இதில் ராஜாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, ராஜாவின் நண்பர் வீரா அங்கிருந்து ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பட்டிவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராஜா மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், நாட்டு வெடியை எங்கிருந்து வாங்கினார், எதற்காக வாங்கினார், வீரா ஏன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் ஜகுபர் அலி என்பவர் வெடிக்கடை நடத்தி வருகிறார். வெடிக்கடையின் ஒரு பகுதியில் ஓட்டலும் நடத்தி வந்தார். ஓட்டலில் 2 கியாஸ் சிலிண்டர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், அறந்தாங்கி உதவி கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவின்பேரில் மணமேல்குடி தாசில்தார் ஜமுனா, வருவாய் ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் வெடிக்கடையில் ஓட்டல் நடத்தியதோடு கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியதால் அந்த வெடிக்கடைக்கு ‘சீல்‘ வைத்தனர். கியாஸ் சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது கிராம நிர்வாக அலுவலர் விஜயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments