பாம்பன் பாலத்தில் ராட்சத கிரேனுடன் மிதவைகள் மோதல்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மிக பழமையான இந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் இடைவெளியில் ரூ.250 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 
இந்தநிலையில், அதிரடியாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையாலும், கடல் அலையின் வேகம் காரணமாகவும் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் புதிய பாலம் கட்டும் பணிகளுக்காக கடலில் நிறுத்தியிருந்த ராட்சத கிரேனுடன் கூடிய 2 மிதவைகள், கடல் அலையின் வேகத்தில் இழுத்துவரப்பட்டு ரெயில் பாலத்தின் தூண்கள் மீது மோதியபடி நின்றன.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட தகவலை தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், தூக்குப்பாலத்தின் அருகில் தூண்களில் மோதி நின்ற 2 மிதவைகளையும் படகுகள் உதவியுடன் இழுத்து தொலைவில் கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் பாலத்தில் மிதவைகள் மோதியதை தொடர்ந்து நேற்று அதிகாலை சென்னையில் இருந்து ராமேசுவரம் வரவேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

மேலும் ரெயில் பாலத்தின் தூண்களில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து ரெயில்வே பொறியாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments