புதுசு பழசானது நாமக்கல் புதிய மருத்துவக் கல்லூரி-யின் பரிதாபம்!!! அமைச்சர்கள் ஆய்வு

நாமக்கல் ஆட்சியர் அலுவலகப் பின்புறம் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடத்தின் போர்டிகோ திடீரென இடிந்து விழுந்தது. காலை வேளை என்பதால் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்களுக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பின்புறம் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ. 336 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் 5-ம் தேதி நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தைத் திறப்பதற்காக கட்டிட கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இரவு, பகலாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை கட்டிட முன்பகுதி கான்கிரீட் தளம் (போர்டிகோ) இன்று (அக். 30) காலை 6 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது.

காலை வேளை என்பதால் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாரும் பாதிப்படையவில்லை. சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "போர்டிகோ கட்டுவதற்காக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு இருந்தது. அதற்காக வைக்கப்பட்ட கம்புகள் சரியான முறையில் இல்லாததால் பொறியாளர்கள் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனால்தான் அது இடிந்து விழுந்தது. மற்றபடி வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதில் யாருக்கும் காயம் இல்லை" என்றார்.


மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் பி. தங்கமணி ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ்.
இதனிடையே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடக் கட்டுமானப் பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காலை நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடப் பணி நடந்து கொண்டிருந்தபோது முற்பகுதி சரிந்தது. விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை. வெல்டிங் விட்டுப் போன காரணத்தினால் பொறியாளர்களே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இடித்துவிட்டனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தற்போது அதனைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிப்பாளையத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த இருவருக்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அரசுக் கட்டிடங்கள் தரமானதாக இல்லை என நாமக்கல் எம்.பி. சின்ராஜ் குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார். எம்.பி. பணி மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான். கட்டிடங்களைத் தரம் பார்ப்பது அதிகாரிகளின் பணி. அதற்காகத்தான் அரசு அதிகாரிகளுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு அரசியல் விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களை அவர் செய்து வருகிறார். தேர்தலுக்கு முன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும். தமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பில்லை, தேர்தல் நேரம் என்பதால் நீங்களாகவே கூறிக்கொள்கிறீர்கள். இயற்கையின் சீற்றம் காரணமாகவே பாதுகாப்பு கருதி ஆங்காங்கே மின் தடை ஏற்படுகிறது.

பொள்ளாச்சி உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் இழப்பீடு தொகையைக் கொடுத்துவிட்டு எஞ்சிய பணிகளைத் தொடங்குமாறு கூறுகின்றனர். அதிகாரிகள் மற்றும் ஆட்சியரிடம் மதிப்பீடு தொகை எவ்வளவு எனக் கணக்கீடு செய்த பின் நிவாரணத் தொகை வழங்கப்படும்" என்றார்.

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஒப்பந்ததாரர்

நாமக்கல்லைச் சேர்ந்தவர் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு கட்டிடக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக இவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்தான் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டிடத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments