புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை ரயில் பெட்டியாக மாற்றிய ஆசிரியர்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வகுப்பறைக் கட்டிடத்தை ரயில் பெட்டி போன்று ஆசிரியர்கள் வரைந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குளத்தூர் அருகே லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து எஸ்எஸ்எல்சி வரை 236 பேர் பயில்கின்றர்.

இங்குள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் 7 வகுப்பறைகள் உள்ளன. இவற்றில் 3 வகுப்பறைகளை சேர்த்து ரயில் பெட்டி போன்று வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

மேலும் ரயில் பெட்டிகளில் குறிப்பிட்டுள்ளதைப்போன்று புறப்படும் இடம், செல்லும் இடம், முன்பதிவு பெட்டி உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் எழுதப்பட்டுள்ளன. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.ஆண்டனி கூறுகையில், 

"மன இறுக்கம் இன்றி ஆர்வத்தோடு மாணவர்கள் கற்பதற்காக பள்ளி வளாகத்தில் கான்கிரீட்டில் 8 அடி உயரத்தில் உலக உருண்டை, கூழாங்கற்களைக் கொண்டு வண்ணத்துப்பூச்சி போன்ற பாடத் திட்டங்களோடு தொடர்புடைய பல்வேறு படைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பசுமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களின் ஒத்துழைப்போடு பள்ளி வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வளாகத்தில் ஏராளமான பறவைக் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பறவைகளும் பயன்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் பாடப் புத்தகத்தில் 'போக்குவரத்து' எனும் தலைப்பில் உள்ள ரயில் பயணம் குறித்த பாடத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ளவும், ரயிலில் பயணிப்பதைப் போன்ற எண்ணத்தை உருவாக்கவும் 3 வகுப்பறைகளின் வெளிப்புற சுவற்றில் கடந்த 2 மாதங்களில் ரயில் பெட்டி போன்று வரையப்பட்டுள்ளது.

என்னுடன், ஓவிய ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இதுபோன்று பள்ளி வளாகத்தில் ஏராளமான புதுமைகள் ஏற்படுத்தியதன் விளைவாக கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கல்வித் தரமும் மேம்பட்டு உள்ளது" என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments