போட்டோ பேக் அப் செய்ய கூகுள் கட்டணம் - டிரெண்டிங்கில் அதிருப்தி 

  போட்டோக்களை கூகுளில் இனி இலவசமாக பேக்அப் செய்ய முடியாது. 2021, ஜுன் 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது. இதனால் அதன் பயனாளர்கள் அதிருப்தி தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருவதால் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது.


ஸ்மார்ட் போனிலோ அல்லது வேறு கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஹை குவாலிட்டி போட்டோ மற்றும் வீடியோக்களை கூகுள் போட்டோஸில் சேமித்து வைத்து கொள்ளலாம். இதுநாள் வரை இதற்கு குறிப்பிட்ட அளவு தான் சேமிக்க முடியும் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதோடு கட்டணமும் வசூலிக்கவில்லை.


தற்போது கூகுள் போட்டோஸில் 4 டிரில்லியன் போட்டோ, வீடியோக்கள் உள்ளனவாம். ஒரு வாரத்திற்கு 28 பில்லியன் போட்டோக்கள், வீடியோக்கள் வருகிறதாம். இந்நிலையில் இலவசமாக இந்த சேவை வழங்குவதால் கூகுள் நிறுவனத்திற்கு இந்த போட்டோக்களை சேமிக்கவே பெரும் தொகை செலவிட வேண்டி உள்ளதாம். ஆகவே தேவையற்ற செலவுளை குறைக்கும் விதமாக கூகுள் நிறுவனம் இப்போது கூகுள் போட்டோஸில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

அதன்படி 15ஜிபி வரை கூகுள் போட்டோஸில் போட்டோக்களை பேக் அப் வைத்துக் கொள்ள எந்த கட்டணமும் கிடையாது. 2021, ஜுன் 1க்கு முன்பு வரை போட்டோ, வீடியோக்களை சேமித்து வைத்து கொள்ளலாம். 2021, ஜின் 1க்கு பிறகு 15ஜிபிக்கு அதிகமாக போட்டோ, வீடியோக்களை இதில் பேக்-அப் வைக்க வேண்டும் என்றால் நம்முடைய தேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். இந்த மாற்றம் இன்னும் ஆறு மாதங்களுக்கு நடைமுறைக்கு வராது. ஜூன் 1, 2021 முதல் இந்த கட்டண முறை நடைமுறைக்கு வந்தால், உங்களின் ஸ்டோரேஜ் திறன் 15 ஜிபிக்கு அருகில் வந்தால் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நினைவூட்டல் வரும். அப்போது தேவைக்கு ஏற்ப கட்டணம் செலுத்தலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.

ஒருவருக்கு கூகுள் போட்டோஸில் 100ஜிபி ஸ்டோரேஜ் தேவை என்றால் மாதம் ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1300 செலுத்த வேண்டும். இதுபோன்று ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப போட்டோக்களை பேக்அப் வைக்க கட்டணங்களை நிர்ணயித்துள்ளது கூகுள்.

கூகுளின் இந்த அறிவிப்பால் பலர் அதிருப்தியாகி உள்ளனர். குறிப்பாக ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் தங்களது ஆதங்கத்தையும், கவலையையும் சமூகவலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் இந்த விஷயம் #Googlephotos என்ற ஹேஷ்டாக்கில் டிரெண்ட் ஆனது. இது நிச்சயம் கவலை அளிக்கும் செயல் தான் என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பலர் சோகமான மீம்ஸ்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இதற்கு மாற்றாக வேறு சில செயலிகளை சுட்டிக் காட்டி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments