தினமும் 2 முறை பல் துலக்கினால் 80 சதவீத பல், வாய் நோய்களை தடுக்கலாம்: அரசு பல் மருத்துவமனை டீன் விமலா அறிவுரை




தினமும் 2 முறை பல் துலக்கினால் பல், வாய் தொடர்பான 80 சதவீத நோய்களைத் தடுக்க முடியும் என்று சென்னை அரசு பல் மருத்துவமனை டீன் மருத்துவர் விமலா தெரிவித்தார்.

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய பல் துலக்குதல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், இணையவழி மூலம் பள்ளி மாணவர்களுக்கு பல் துலக்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு பற்களை எப்படி துலக்க வேண்டும். ஒழுங்கற்ற பல் துலக்குதல் முறையால் உண்டாகும் வாய் மற்றும் பல் தொடர்பான நோய்கள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.



இதுதொடர்பாக மருத்துவமனை டீன் மருத்துவர் விமலா கூறியதாவது:

ஆண்டுதோறும், பல் துலக்குதல் தினத்தில் அரசு பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு பல் துலக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணத்தால் மாணவர்களுக்கு இணையவழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுபோல், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


முறையாக பல் துலக்கினால் பல நோய்களைத் தவிர்க்கலாம். 80 சதவீத பல், வாய் தொடர்பான நோய்கள் வருவதற்கு முறையாக பல் துலக்காததே முக்கிய காரணமாக உள்ளது. பெற்றோர், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு தெரிந்தால்தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். ஒவ்வொருவரும் காலை மற்றும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு என 2முறை கண்டிப்பாக பல் துலக்க வேண்டும். குறைந்தது 2 நிமிடமாவது பல் துலக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments