தண்ணீரில் தத்தளிக்கும் கோபாலப்பட்டிணம் VIP நகர்.! நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை.!!



கோபாலப்பட்டிணம் VIP நகரில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் VIP நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.தற்போது கடந்த பத்து நாட்களாக மீமிசல் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் இந்த பகுதியில் மழை நீர் வெளியே செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கின்றன.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அந்த பகுதியிலிருந்து மெயின் ரோட்டிற்கு வருவதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,இந்த பகுதியில் ஊராட்சி அமைப்பிலிருந்து வாய்க்கால் வசதி இது வரை செய்து தரவில்லை, மழை காலங்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி தீவு போல மாறி விடுகிறது. இங்கிருந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட செல்ல முடியாமல் தத்தளித்து வருவதாகவும், சில நேரங்களில் தண்ணீரில் பாம்பு, விஷ புச்சிகள் மிதந்து வருவதால் பயத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். 

மேலும் அந்த மழைநீரில் கழிவு நீர் கலந்து கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் குடியிருப்பவர்களை கடித்து வருகிறது. இதனால் கொடிய நோயான கொரோனா காலகட்டத்தில் மேலும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதோடு, நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள குறைகள் குறித்து ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டும் இதே போன்று தண்ணீர் வெளியே செல்ல வழியில்லாமல் தத்தளித்தனர். அப்பொழுது ஊராட்சி நிர்வாகத்தால் தற்காலிக வாய்க்கால் அமைக்கப்பட்டது. வருட, வருடம் இது போன்ற துயரங்களை அப்பகுதிமக்கள் அனுபவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

புகைப்பட உதவி: சுல்தான் அப்துல் காதர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments