‘நிவர்’ புயல் எதிரொலி: கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை கடலோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.! வெறிச்சோடிய மீன்பிடி தளங்கள்.!!‘நிவர்’ புயல் எதிரொலியாக கடலோரங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

‘நிவர்’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகளை கரையோரமாக கயிறு கட்டி இடைவெளிவிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மணல்மேல்குடி பொன்னகரம் மற்றும் கோட்டைப் பட்டினம் பகுதியிலும் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் தங்களது வலைகளை சரிசெய்து மூட்டை கட்டி பத்திரமாக வைத்துள்ளனர். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மணமேல்குடி, கட்டுமாவடி மீன்மார்க்கெட்டுகள் மீன்வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 

கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மணமேல்குடி தாசில்தார் ஜமுனா கூறும்போது, ‘மணமேல்குடி தாலுகாவில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் தங்கள் பணிபுரியும் இடத்திலேயே தங்கி பணிபுரிய வேண்டும். 

தாழ்வான பகுதி மற்றும் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் பொதுமக்களை தங்க வைக்க 24 கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மண்எண்ணெய் விளக்கு ஆகியவை தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதேபோல் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், நவீன்குமார் உள்பட குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் நிவர் புயலை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளனர். கோட்டைபட்டினம் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலம் என்பதால் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments