‘நிவர்’ புயலை கண்டு மிரண்ட புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நிம்மதி.!!‘நிவர்‘ எனும் புயல் கரையை கடப்பது வேறு பகுதி என்பதால், அதனை கண்டு மிரண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர்.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாறியது. இதற்கு ‘நிவர்‘ எனும் பெயரிடப்பட்டது. இந்த புயல் பற்றி அறிவிக்கப்பட்ட போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்‘ விடுவிக்கப்பட்டது. 

மேலும் முன்னெச்சரிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து நேற்று முன்தினம் முதல் நிறுத்தம் செய்யப்பட்டன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல்வேறு தரப்பிலும் எடுக்கப்பட்டன. ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ‘கஜா‘ புயல் வந்த போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றது. மாவட்டத்தில் தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் பல்லாயிரக்கணக்கில் சேதமடைந்தன.

இதேபோல சாலையோரம் இருந்த பழமையான மரங்களும் சாய்ந்து விழுந்தன. புயல் காற்றிற்கு இரையான குடிசைகள், வீடுகள், வீடுகளின் மேற்கூரைகள் என பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். ‘கஜா‘ புயலில் வாழ்வாதாரத்தை இழந்து நிலைகுலைந்து போன புதுக்கோட்டை மாவட்ட மக்கள் படிப்படியாக மீண்டு வரத்தொடங்கினர்.

இந்த நிலையில் கஜாவின் சுவடுகள், நினைவுகள் இன்னும் நீங்காத நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அதே நவம்பர் மாதத்தில் ‘நிவர்‘ புயல் வங்க கடலில் உருவானது, புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த புயலும் தாக்கி விடுமோ? என்ற கவலை ஏற்பட்டது. 

ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரங்களை பொதுமக்கள் பலர் இழந்த நிலையில், மேலும் நிவர் புயல் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடத்திலேயே ஏற்பட்டது. அதே நேரத்தில் புயலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதேபோல பொதுமக்களும் தாங்களாக முன்வந்து சில பணிகளை மேற்கொண்டனர். தங்கள் பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களின் கிளைகளை வெட்டினர். மேலும் ஒரு சிலர் வீடுகளின் மேற்கூரைகளில் ஓடுகள் பதிக்கப்பட்டிருந்ததை கழற்றி தனியாக வைத்தனர். 

மரங்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் நீர் நிலைப்பகுதிகளில் கரைகளை பலப்படுத்தினர். தாழ்வான பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் நிவாரண முகாம்களை அமைத்தனர்.

‘கஜா‘ புயல் பாதிப்பில் நிவாரண பணிகளை மேற்கொண்ட அனுபவத்தின் மூலம் ‘நிவர்‘ புயலை நெருங்க விடாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு மற்றும் அதிகாரிகள் சரியாக திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுத்தனர். மேலும் புயல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். பொதுமக்களும் மழையை எதிர்பார்த்து கடந்த 2 நாட்களாக அச்சத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் புயல் நேற்று இரவு புதுச்சேரி- மரக்காணம் இடையே கரையை கடக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்ற நிலை உருவானது. ‘நிவர்‘ புயலை கண்டு மிரண்டிருந்த பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். 

மாவட்டத்தில் புயல் தொடர்பான மழையும், அதிகப்படியான காற்றும் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்தனர். புயல் தாக்கிவிடுமோ? என்ற அச்சத்தில் இருந்த மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் இன்று (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை 16 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் புதுக்கோட்டை மாவட்டம் இடம் பெறவில்லை. இதில் இருந்தே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புயல் பாதிப்பு வராது என ஓரளவு மக்கள் அறிந்து கொண்டனர். இன்னும் முழுமையாக ‘நிவர்‘ புயல் கரையை கடந்து தமிழகத்தில் மற்ற மாவட்ட மக்களுக்கும் எந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பது தான் அனைவரது மனநிலையும்...

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments