அறந்தாங்கி பேருந்து நிலையம் முன் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் பயணிகள் தவறி விழும் அபாயம்..!அறந்தாஙகி பேருந்துநிலையம் முன்பு ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தவறிவிழும் அபாய நிலை உள்ளதால் உடனடியாக சரி செய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் 2-வது பெரிய நகராக அறந்தாங்கி நகரம் விளங்கி வருகிறது. முதல்நிலை நகராட்சியான அறந்தாங்கி நகராட்சியின் நிர்வாகத்தின்கீழ் கலைஞர்கருணாநிதி பேருந்து நிலையம் உள்ளது. அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, திருவாரூர், திருச்செந்தூர், குமுளி, மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேறும் இடத்தில் டாக்சி மார்க்கெட் அருகில் சாலையில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், பேருந்து நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வருவோர் அந்த பள்ளத்தில் வாகனத்தை இறக்குவதால், தவறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் பேருந்துகள் இந்த பள்ளத்தில் இறங்கி ஏறுவதால், பட்டைகள் உடைந்து பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்து நிர்வாகங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த பள்ளத்தில் தேங்கும் தண்ணீரில் கொசுக்களும் உற்பத்தியாகி நோயை பரப்புகின்றன. எனவே அறந்தாங்கி நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments