படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க நம்புதாளை ஆற்றை ஆழப்படுத்த வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை.!




நம்புதாளையில் புயல், மழை காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க ஆற்றை ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகேயுள்ளது நம்புதாளை. 
இங்கு 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாட்டு படகு மீன்பிடி தொழிலே அதிகளவில் உள்ளது. நம்புதாளை கடலின் தெற்கே ஆற்று ஓடை பகுதி உள்ளது. புயல், மழை காலங்களில் இந்த ஆற்றில்தான் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பார்கள். இந்த ஆறு மேடான பகுதியாக இருப்பதால் குறைந்தளவு படகுகளே நிறுத்த முடிகிறது. பெரும்பாலான படகுகள் கடலிலே நிறுத்தப்படுகிறது.

இதனால் புயல், மழை காலத்தில் அலையின் வேகத்தில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்து விடுகிறது. காற்றின் வேகம் அதிகமாகி விட்டாலே மீனவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் படகுகளை மீட்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டால் மீனவர்கள் வேறு இடங்களில் சென்று தங்கி விடுவர். எனவே மாவட்ட நிர்வாகம் நம்புதாளை ஆற்று பகுதியை ஆழப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாட்டு படகு மீனவர் சங்க தலைவர் ஆறுமுகம் கூறுகையில், ‘கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து புயல், மழையின் காரணமாக கடலுககு மீன்பிடிகக மீனவர்கள் செல்ல முடியவில்லை.

மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் நம்புதாளை பகுதியில் படகுகளை விட்டு விட்டு மீனவர்கள் செல்ல முடியவில்லை. காரணம் ஆற்றில் படகுகளை நிறுத்த போதுமான வசதி இல்லாததுதான். கடல்கரையில் நிறுத்தினால் அலையின் வேகத்தால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்து விடுகிறது. வாழ்வாதாரம் பாதிககப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் படகுகளை பாதுகாப்பதிலையே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. படகுகளை பாதுகாப்பாக நிறுத்தினால்தான் நாங்கள் வேறு இடத்திற்கு சென்று தங்க முடியும். எனவே நம்புதாளை ஆற்றுப்பகுதியை தூவாரி ஆழப்படுத்தி தந்தால் புயல், மழை காலங்கிளல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு மீனவர்கள் அனைவரும் மேடான பகுதிக்கு சென்று தங்கி விடுவோம்’ என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments