புதியவகை கரோனா வைரஸ்; சர்வதேச விமானப் போக்குவரத்து ஒருவாரம் ரத்து: சவுதி அரேபியா, துருக்கி அதிரடி



பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு நேற்று இரவு முதல் விதித்துள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியாவும்,  துருக்கி நாடுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்குத் தடை விதித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சமீபத்தில் வந்தவர்கள், புதிய கரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்த மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  சவுதி அரேபிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மீண்டும் ஒருமுறை கரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சவுதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தரைவழி எல்லையையும் மூட  சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

துருக்கி அரசு வெளியிட்ட அறிவிப்பில், “பிரிட்டன், டென்மார்க், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்துள்ளது. இந்த நாடுகளுக்குத் தற்காலிகமாக விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து துருக்கி சுகாதாரத்துறை அமைச்சர் பஹ்ரடின் கோகா கூறுகையில், “பிரிட்டனில் கரோனா வைரஸில் புதியவகை பரவி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதிபரின் உத்தரவின்படி, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறையின் ஒத்துழைப்புடன் பிரிட்டன், டென்மார்க், நெதர்லாந்து , தென் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தற்காலிகமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருக்கும் துருக்கி மக்களை அழைத்துவர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

மொராக்கோ நாடும், பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நேற்று இரவிலிருந்து நிறுத்திவிட்டது. ஏற்கெனவே உலகை அச்சுறுத்திவந்த கரோனா வைரஸ் பரவும் வேகத்தை விட 70 சதவீதம் வேகமாக புதியவகை வைரஸ் பரவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பிரிட்டனில் உள்ள மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் லண்டன் உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் அதிகமான கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது. புதியவகை வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கான தரைவழி எல்லையை மூடிவிட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments