ஹஜ் புனித பயணத்துக்கு ஏஜெண்டுகளிடம் முன்பணம் கொடுக்க வேண்டாம்.




ஹஜ் புனித பயணத்துக்கு ஏஜெண்டுகளிடம் முன்பணம் கொடுக்க வேண்டாம் என இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணம் தொடர்பான எந்தவித தீர்க்கமான முடிவையும் சவுதி அரசாங்கம் எடுக்கவில்லை. இதுதொடர்பாக இந்திய அரசாங்கமும், சவுதி அரசாங்கமும் புனிதப்பயணம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும். அதில் தான் ஹஜ் செய்வதற்கு எத்தனை கோட்டா ஒதுக்கப்படும் என்பது தெரியும். இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவில்லை. ஏனென்றால் இந்தியாவில் இருந்து சவுதிக்கு விமான போக்குவரத்தே இல்லை.

மேலும் சவுதி அரசாங்கம் சென்ற ஆண்டு கொடுத்த ஹஜ் ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் மட்டுமே 2021 ஆண்டில் ஒதுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ மற்ற செய்தி ஒன்று நிலவி வருகிறது. கடந்த காலத்தில் இந்தியாவிலிருந்து ஹஜ்க்கு 2 லட்சம் பேர்களை அனுப்பியிருக்கின்றோம். 20 சதவிகிதம் என்றால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை 40 ஆயிரம் பேர்களைத்தான் ஹஜ்சுக்கு அனுப்ப முடியும். இதில் மத்திய அரசின் அனுமதிபெற்ற ஹஜ் ஏற்பாட்டாளர்களுக்கு 20 சதவிகிதம் ஒதுக்கினால் ஹஜ் கமிட்டி மூலம் 32 ஆயிரம் பேர்களும் தனியார் மூலம் 8 ஆயிரம் பேர்களும்தான் ஹஜ் செய்ய முடியும்.

இதற்கிடையே மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குறைந்தது 50 ஆயிரம் பேர்களுக்காவது ஹஜ் பயண ஒதுக்கீடு கேட்டு சவுதி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கும் சவுதி அரசாங்கத்திடமிருந்து எந்தவித ஒப்புதலும் வரவில்லை. காரணம் ஏனைய அனைத்து நாடுகளுக்கும் 20 சதவிகிதம்தான் ஒதுக்கீடு செய்யப்போவதாக செய்திகள் வந்துள்ளது.

எனவே 2021 ஜனவரி 10ந்தேதிக்குள் ஆன்லைனில் ஹஜ் செல்ல விண்ணப்பம் செய்யலாம். அதற்கு ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும். வேறு எந்த முன்பணமும் அரசாங்கம் சொல்லும் வரை கட்டத்தேவையில்லை. மேலும் தனியார் ஏற்பாட்டாளர்கள் 2021 ஹஜ் உம்ரா ஆகியவற்றுக்கு முன்பு செய்ததைப்போல் எந்த பொருளாதார முதலீடும் சவுதியில் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சவுதி அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹஜ் புனித பயணம் வெளிப்படை தன்மையாக இருக்கும். சவுதி உள்ளிட்ட நாடுகளில் உள்ள இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல், பயணிகளே வெளிப்படையாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் முறை கொண்டு வரப்படும். அதற்காக ஒரு இணையதளம் உருவாக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இதுவரை எந்த டிராவல் ஏஜெண்டுகளுக்கு விசா வழங்கவில்லை. எனவே டிராவல் ஏஜெண்டுகளிடம் யாரும் முன்பணம் கொடுக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments