மனிதநேய மக்கள்கட்சியின் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்..!
ஈரோடு மாநகரில் டிசம்பர் 22, 2020 அன்று கூடிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானங்கள்

மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த சகோதரர் ஆம்பூர் அ. அஸ்லம் பாஷா. தலைமை செயற்குழு உறுப்பினர் கள்ளக்குறிச்சி சுலைமான் ஹாஜியார், மௌலவி எஸ்.பி.யூசுஃப் பைஜி உட்பட இறையழைப்பை ஏற்றுக்கொண்ட, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தாருக்கு இந்தச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றது. இவர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மறுமையின் நற்பேறுகளை வழங்குவதற்கும் அவர்கள் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை அளிப்பதற்கும் இந்த செயற்குழு பிரார்த்தனை செய்கிறது.

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு

கொரோனா காலத்தில் மக்களுக்கு அரும்பெரும் சேவைகளை ஆற்றி அதனால் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் இச்செயற்குழு தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறது. அவர்கள் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை அளிப்பதற்கும் இந்த செயற்குழு பிரார்த்தனை செய்கிறது.

தீர்மானம் 1

திமுக கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபடுவோம்

தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு அடிமைச் சேவகம் செய்து மாநிலங்களின் உரிமைகளை காவு கொடுத்து வருகின்றது. அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது.

தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும், சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும், தமிழக மக்களின் நலன்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கும் நல்லாட்சியை தமிழகத்தில் மலர வைப்பது காலத்தின் கட்டாயமாகும். எனவே வரும் 2021ல் தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை 200 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றிபெற வைப்பதற்காக அயராமல் களப்பணியாற்ற இச்செயற்குழு உறுதி எடுத்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: மண்டலப் பொதுக் குழுக்கள்

தமிழகம் முழுவதும் மாநகர் முதல் சிற்றூர் கிளை வரை மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களின் தேர்தல் களப்பணிகளை செழுமையாக்க வரும் ஜனவரி மாதம் மண்டலப் பொதுக்குழுக் கூட்டங்களை 7 மண்டலங்களிலும் நடத்துவதென தீர்மானிக்கப்படுகின்றது.

தீர்மானம் 3: தமிழகத்தில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற வேண்டும்

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் நேர்மையாக நடைபெறுவதற்கு வழிவகுக்கும் வகையில் ஒரே கட்டமாக நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இச்செயற்குழு கோருகின்றது.

தீர்மானம் 4: மத்திய அரசுமூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் முக்கொலைகளை செய்துள்ளன.

நமது நாட்டின வேளாண்மைத் துறையைச் சீர்குலைத்து பெருமுதலாளிகளின் ஏகபோக தொழிலாக வேளாண்மையை மாற்றி ஒரு கொலை செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை என்பது மாநிலங்களின் அதிகாரத்திற்குட்பட்டவையாக அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள நிலையில், மாநிலங்களின் உரிமைகளை நிராகரித்து நாடாளுமன்றத்தின் நெறிமுறைகளையும் புறந்தள்ளி இரண்டாம் கொலை நடைபெற்றுள்ளது.

இச்சட்டங்களின் விளைவாக பொது விநியோகத் திட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு நியாய விலைக் கடைகள்  இல்லாத சூழலை ஏற்படுத்த மூன்றாம் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

எனவே தான் உலக வரலாறு காணாத வகையில் இந்திய விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்து மக்களின் குடியையும் கெடுக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலட்சக்கணக்கான விவசாயிகள் தங்களது ஜீவாதார கோரிக்கைகளை முன்வைத்து, கொடிய குளிரில் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்ப்பரேட் சேவக மத்திய அரசு அவர்களின் கோரிக்கையைக் கல்நெஞ்சத்தோடு நிராகரித்து வரும் கயமைத்தனத்தையும் நாட்டு மக்களின் வாழ்வுரிமைக்காக தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் விமர்சிக்கும் மத்திய அமைச்சர்களையும் இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

உடனடியாக, போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது

தீர்மானம் 5: விவசாய மாவீரர்களுக்குப் பாராட்டு

 மத்திய பாஜக அரசின் மனிதநேயமற்ற கொடும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், அகிம்சை வழியில், அகிலமே வியக்கும் வகையில் விவசாய உரிமைக் காக்க வியக்கத்தக்க உறுதியுடன் போராடி வரும் விவசாயிகளுக்கு இந்தச் செயற்குழு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியர்களின் நலன்களுக்காக இப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது இன்னுயிரையும் நல்கிய 31 ஈகியர்களுக்கு இச்செயற்குழு தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறது.

தீர்மானம் 6: குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏஏ கைவிடப்பட வேண்டும்

மத்திய பாஜக அரசு மதவாதக் காழ்ப்புணர்வோடு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) ஆகியவை இந்நாடு முழுவதுமுள்ள குடிமக்களைக் கொந்தளிக்கச் செய்தன.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு நாடு தழுவிய மாபெரும் போராட்டங்கள் இச்சட்டங்களுக்கு எதிராகவே நடந்துள்ளன. ஆயினும், மக்களின் உணர்வைக் கடுகளவும் மதிக்காத மத்திய பாஜக அரசு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய கொடுமைகளை இன்னும் கைவிடவில்லை. மக்களின் உணர்வை மதித்து இவற்றை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7: சாதிவாரி கணக்கெடுப்பில் சமூகநீதி

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் முஸ்லிம்களின் மக்கள் தொகை முறையாகப் பதிவு செய்யப்பட்டு, முஸ்லிம் சமுதாயத்திற்கு அனைத்துத் துறைகளிலும் உரிய சமூகநீதி கிடைத்திட உத்தரவாதம் அளித்திட வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8: வேலைவாய்ப்புவெள்ளை அறிக்கை

முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான கல்வி வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு என்பதை 1995ல் தனது துவக்க காலம் முதல் முன்வைத்து தமுமுக நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக 2007ஆம் ஆண்டு தமிழகத்தில் 3.5% தனி இடஒதுக்கீடு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.

முஸ்லிம்களின் சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் இது ஒரு மகத்தான மைல்கல்லாய் ஆனது. ஆயினும், அதிகார வர்க்கத்தில் மறைந்துள்ள பல சூழ்ச்சிக்காரர்களால் முஸ்லிம்களின் சமூகநீதி தொடர்ந்து வழிமறிக்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்துத் துறைகளிலும் 2007க்குப் பிறகு நிரப்பப்பட்ட அனைத்துப் பணியிடங்களிலும் முஸ்லிம்களின் உரிமையான 3.5 விழுக்காடு முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதற்கு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், அவ்வாறு நிரப்பப்பட்டிராத நிலையில், முஸ்லிம்களுக்குரிய இடங்களை முறையாக நிரப்பிட வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9: இனசுழற்சி முறையை மாற்றி அமைக்க வேண்டும்

முஸ்லிம்களுக்கான 3.5% தனி இடஒதுக்கீடு இனசுழற்சி முறை (Communal Roaster)யின் குளறுபடிகளால் பல இடங்களில் பாதகத்தை ஏற்படுத்தும் செய்திகள் வருகின்றன. குறிப்பாக 10 இடங்களுக்குட்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் உட்பட பல துறைகளில் தகுதியுள்ள முஸ்லிம்களுக்கான வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படும் சூழல் கவலைக்குரியது.

எனவே இனசுழற்சி முறையை மாற்றி அமைப்பதோடு, முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையைக் கருத்திற்கொண்டு முதுநிலை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பு ஒதுக்கீடுகளை அரசு வழங்கிட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10: எச்சரிக்கை

சிறுபான்மைத் தகுதி என்ற சிறப்பு நிலையை கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் சாசனம் வழங்குவதன் நோக்கமே சிறுபான்மை மக்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். சிறுபான்மைத் தகுதி பெற்ற சில கல்வி நிறுவனங்கள், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த தகுதி மிக்கவர்களைப் புறக்கணித்து விட்டு, லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சிறுபான்மை சமுதாயத்தைச் சேராதவர்களுக்குப் பணிவாய்ப்புகளை வழங்கும் கயமைத்தனம் நடைபெற்று வருகின்றது.

லஞ்சம் கொடுக்க முடியாத சிறுபான்மையினரைப் புறக்கணித்துவிட்டு, லஞ்சம் தந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் கொடுமையைச் செய்வோருக்கு இச்செயற்குழு கடும் எச்சரிக்கை விடுக்கிறது. இவ்வாறு நடந்துள்ள நிறுவனங்கள் உடனடியாகத் தமது தவறை சரிசெய்து, சிறுபான்மையினருக்கான வாய்ப்பை மீண்டும் வழங்கிட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11: தப்லீக் ஜமாஅத்திடம் மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்

இந்தியாவில் கொரோனா தொற்று நோய் பரவத் தொடங்கிய வேளையில், திட்டமிட்டு தப்லீக் ஜமாஅத்தினர் மீது அபாண்ட பழி சுமத்தி, வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்து, டெல்லி தப்லீக் ஜமாஅத் தலைமையகத்தை கொரோனாவை பரப்பிய மையம் என்று சித்தரித்து, மதவெறி பிடித்த மத்திய பாஜக அரசு கொடிய தாண்டவம் ஆடியது. மத்திய அரசின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட சில ஊடகங்கள் தப்லீக் ஜமாஅத் குறித்து மிகுந்த வன்மத்தோடு செய்திகளை வெளியிட்டன. தற்போது உண்மைகள் வெளிவந்து விட்டன. மத்திய அரசின் தீயநோக்கத்துடன் அவதூறு பரப்பி தப்லீக் ஜமாஅத்தினர் பலிகிடாவாக்கப்பட்டனர் என்று ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இச்சூழலில், ஆறு மாதங்களுக்கு மேலாக தமது தாய்நாட்டிற்குத் திரும்ப விடாமல் சிறையில் அடைத்து பன்னாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பைச் சீர்குலைத்தமைக்காக பிரதமர் மோடி தப்லீக் ஜமாஅத்தினரிடமும் சம்பந்தப்பட்ட நாடுகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இச்செயற்குழு கோருகின்றது. மேலும் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினருக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவர்களை இந்தியாவிற்குள் மீண்டும் வருவதற்குப் பிறப்பிக்கப்பட்ட தடை ஆணையை நீக்க வேண்டும் என்றும் கோருகின்றது.

தீர்மானம் 12: காவிரியில் சட்டவிரோத அணை கட்டாதே

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக பாஜக அரசு முயன்று வருகிறது. தமிழகத்தைப் பழிவாங்கும் வகையில் மத்திய பாஜக அரசு இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் சூழல் நிலவுகிறது. கர்நாடக மாநில பாஜக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் இதுகுறித்து நடத்திவரும் தொடர் சந்திப்புகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், உச்சநீதிமன்ற மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு எதிராக, மேகேதாட்டு அணை கட்டப்பட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என இச்செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு இதற்காக தமது கூட்டணிக் கட்சியான பாஜகவுடன் வாதாடி போராடி மேகேதாட்டு அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 13 : ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைத் தரணியை சுடுகாடாக்கும் நோக்கத்தோடு, பணவெறி பிடித்த பகாசுர நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பது, மீத்தேன் எடுப்பது உள்ளிட்ட திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்திட முயல்கின்றன. இதற்கு, காவிரிப் படுகையின் ஒட்டுமொத்த மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வருகின்றனர். இப்பகுதியை சுடுகாடாக்கும் நோக்கில் வேதாந்த குழுமம் ரூ.13,500 கோடியும், மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி. ரூ.5,150 கோடியும் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்த நிலையில், மக்கள் போராட்டம் வலுப்பெற்றது.

தமிழக அரசு இப்பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதி’ என அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில் 2020 நவம்பரில் ஆழ்கடல் பகுதி ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. காவிரிப் படுகையிலும் இந்த அவலம் அரங்கேறுமா என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாக அறிவிக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 14 : புயல் இழப்பீடு வழங்குக

தமிழகத்தில் நவம்பர் 25, 2020 அன்று வீசிய நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பயிர்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ள விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது. டிசம்பர் 7, 2020 அன்று வீசிய புரெவி புயலாலும் கனமழையாலும் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இழப்புகளைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 15 : ஏழு தமிழர்களை விடுதலை செய்க

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு செப்டம்பர் 9, 2018ல் அனுப்பி வைத்தது. இதை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஆளுநரின் அலட்சியப் போக்கிற்காக நவம்பர் 23, 2020 அன்று உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது.

பாஜகவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஏழு தமிழர் விடுதலையை கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு இச்செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து அவர்களின் மறுவாழ்விற்கு அரசு வழிவகுக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 16 : தமிழ்நாட்டில் தமிழருக்கே பணிவாய்ப்பு

அண்மைக் காலமாக தமிழகத்தின் பணிவாய்ப்புகளைத் திட்டமிட்டு இந்தி பேசும் வடமாநிலத்தவருக்குத் தாரைவார்க்கும் வஞ்சகச் செயல் நடந்து வருகிறது. இது மத்திய பாஜக அரசின் சதித்திட்டமாக உள்ளது. அடிமைப்பட்ட அதிமுக அரசு இதற்கு உடந்தையாக உள்ளது.

தமிழகத்தில் ரயில்வே பணியாளர்களுக்கு நடந்த தேர்வில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட செய்தி நம்மை அதிரவைத்தது. இந்நிலையில், தமிழகத்தில் மத்திய, மாநில அரசுப் பணிகள் மட்டுமின்றி அரசின் அனுமதி, உதவி ஆகியவற்றோடு நடைபெறும் அனைத்து நிறுவனங்களின் வேலை வாய்ப்பிலும் தமிழ்நாட்டு மக்களுக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்17: சமையல் எரிவாயு விலையேற்றத்திற்கு கண்டனம்

சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ100 உயர்த்தியுள்ளது.. சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி ஏழை நடுத்தர மக்களின் வாழ்வை பெரிதும் சிரமத்திற்குள்ளாக்கி வருகின்றது மத்திய பாஜக அரசு. உடனடியாக சமையல் எரிவாயு விலையேற்றத்தை திரும்பபெற வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்துவதென இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.

தீர்மானம்18: இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உடல் எரிப்பிற்கு கண்டனம்

இலங்கையில் கொரோனாவினால் உயிர் இழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களின் உடல்களைத் தொடர்ந்து இலங்கை அரசு எரித்து வருகின்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு விரோதமாக சிங்களப் பேரினவாத இலங்கை அரசு இந்த கொடுங்கோன்மையை நடத்தி வருகின்றது. சென்னை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த அராஜகத்தை நிறுத்தக் கோரி கண்டனப் போராட்டங்கள் நடைபெற்ற போதினும், இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலுவாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதினும் தொடர்ந்து பச்சிளம் பாலகர்களின் சடலத்தையும் எரிக்கும் இலங்கை அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் இந்த மனிதாபிமானமற்ற அநாகரீகப் போக்கைக் கைவிடுமாறு இச்செயற்குழு அழுத்தமாக வலியுறுத்துகிறது.

தீர்மானம் 19: புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசீய கல்விக் கொள்கை 2020 என்னும் புதிய கல்விக் கொள்கை கல்வியை தனியார்மயமாக்கி மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது. சாமானிய மக்களுக்குக் கல்வியை எட்டாக்கனியாக்கும் திட்டமாக அமைந்துள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 சுற்றுச் சூழலுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்த சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு 2020 அறிக்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்20:  கொரோனா காலத்தில் தொண்டாற்றிய நல்உள்ளங்களுக்குப் பிரார்த்தனை

கொரோனா முழு முடக்கத்தின் போது மக்களுக்குத் தம் உயிரை துச்சமெனக் கருதி தொண்டாற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தொண்டர்களுக்கு இச்செயற்குழு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் நலன்களுக்காக இறைவனை இச்செயற்குழு வேண்டுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments