அன்னவாசலில் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்கம்- 320 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளைஅன்னவாசலில் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி- நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

அன்னவாசல் அருகே உள்ள விளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலகுருமூர்த்தி(வயது 39). இவர் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய வணிக வளாகத்தில் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். 

நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் விற்பனை முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு பாலகுருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த தங்கம்- வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து பாலகுருமூர்த்தி அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு இருந்தது. மோப்பநாய் கடையில் இருந்து சித்தன்னவாசல் சாலை வரை சென்று மீண்டும் திரும்பி வந்தது. 

இந்த சம்பவத்தில் 8 பவுன் நகை, 320 கிராம் வெள்ளி பொருட்கள், நகையை எடைபோடும் தராசு, எல்.இ.டி. டி.வி உள்ளிட்டவைகள் கொள்ளை போயின. இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments