வடகாடு- கீழாத்தூர் செல்லும் இணைப்பு சாலையை துண்டித்த காட்டாற்று வெள்ளம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, கீழாத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள், வடகாடு அரசு மருத்துவமனை மற்றும் அம்மன் கோவில் குளம் வழியாக சென்று தான் தங்களது தோட்டங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பாதையானது மூன்று ஊராட்சிகளையும் இணைப்பது வடகாடு-கீழாத்தூர் இணைப்பு சாலையாகும். இப்பகுதிகளில் நெல், வாழை, சோளம், கரும்பு, புடலை, பாகை, மல்லிகை, முல்லை, சம்பங்கி போன்ற பயிர்களை இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.

மேலும் இந்த சாலையானது கொத்தமங்கலம்-சிதம்பரவிடுதி இணைப்பு சாலையாகவும் உள்ளது. இச்சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் மாட்டு வண்டி செல்லக்கூடிய அளவில் மண்சாலையாக உள்ளது.


காட்டாற்று வெள்ளம்


இந்த சாலையின் முடிவில் காட்டாற்று வெள்ளம் செல்லும் வழி உள்ளது. தற்போது இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் 3 முதல் 4 அடிக்கு தண்ணீர் செல்வதால் வடகாட்டில் இருந்து அம்மன் கோவில், கீழாத்தூர், கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி வரை செல்லும் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் கொத்தமங்கலம், சிதம்பரவிடுதி வழியாக வடகாடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.


மேலும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இந்த மண் சாலையை சீரமைத்து, பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments