விராலிமலை அருகே டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
மதுரை மாவட்டம் ஆத்திகுளம் சித்து தெருவைச் சேர்ந்தவர் பைசல்கனி (வயது 45). இவர், அவரது சகோதரர் முகமது ரிசாத் (38) மற்றும் இவர்களது நண்பர்களான திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த அபுபக்கர் (49), மதுரை கோரிப்பாளையம் பத்துநோன்பு சாவடியை சேர்ந்த முகமது சபியுல்லா (44) ஆகிய 4 பேரும் நேற்று காரில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

 

காரை முகமது சபியுல்லா ஓட்டினார். கார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் குக்குடிப்பட்டியில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து, கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பைசல் கனி, முகமது ரிசாத், அபுபக்கர் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முகமது சபிபுல்லா படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முகமது சபியுல்லாவை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் போலீசார் தாங்கள் வந்த ஜீப்பை சாலையோரத்தில் நிறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் போலீஸ் ஜீப் மீது வேகமாக மோதியது. இதில் காரில் வந்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போலீஸ் ஜீப்பில் யாரும் இல்லாததால், போலீசார் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments