புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் விற்பனை உரிமம் ரத்து.! கலெக்டர் எச்சரிக்கை.!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் உரங்களை அதிகவிலைக்கு விற்றால் விற்பனை உரிமம் இரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிருக்குத் தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தால் உர விற்பனையாளர்களின் உர விற்பனை உரிமம் இரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

நடப்பு சம்பா பருவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 84,884 எக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான யூரியா, அம்மோனியம் சல்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையானஅளவு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதுமானஅளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 5,600 மெ.டன், டி.ஏ.பி 1,150 மெ.டன், பொட்டாஷ் 3,040 மெ.டன், காம்ப்ளக்ஸ் 5,460 மெ.டன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

உரவிற்பனையாளர்கள் மானியவிலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையினைக் கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் நாள்தோறும் பராமரிக்க வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும் போது அவர்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும்.

உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை, மூட்டையில் குறிப்பிட்டுள்ள அதிக பட்சவிலைக்கு மிகாமல் விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள விலைக்கு மேல் விற்பனை செய்வது குறித்து புகார் பெறப்பட்டால் அல்லது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உர விற்பனையாளர்கள் மீது உரக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1985- இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

விவசாயிகள் உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்யப்படுவதால் கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும். உரம் வாங்கும் போது கட்டாயமாக ரசீது கேட்டு பெறவேண்டும்.

மேலும், உரங்கள் அதிகவிலைக்கு விற்கப்பட்டாலோ, இதர இடுபொருள்களை வாங்கும்படி வற்புறுத்தப்பட்டாலோ விவசாயிகள் உரிய ஆதாரங்களோடு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலுள்ள 04322-221666 என்ற தொலைபேசி எண்ணுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அவர்களிடமோ உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments