திருமண பதிவுக்கு வருவோரை அலையவிடக்கூடாது: சார் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு
திருமணத்தை பதிவு செய்ய வருவோரை அலையவிடக்கூடாது என, அனைத்து சார் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை ஐஜி-க்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த யு.கலாதீஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

"நான் பக்ரைனில் பணிபுரிந்த போது இலங்கையைச் சேர்ந்த பரிமளாதேவியை 2 ஆண்டுகளாக காதலித்தேன். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் 2018-ல் திருமணம் செய்து கொண்டோம். பரிமளாதேவி 3 மாத சுற்றுலா விசாவில் இந்தியா வந்து என்னை திருமணம் செய்து கொண்டார்.

சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் எங்கள் திருமணத்தை பதிவு செய்ய காரைக்குடி ஜாயிண்ட் 2 சார்பதிவாளரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அவர் எங்கள் விண்ணப்பத்தை வாங்க மறுத்துவிட்டார். எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று (டிச. 25) விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

"சிறப்பு திருமணச் சட்டத்தில் திருமண பதிவுக்கு மனைவி இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்றோ, இந்திய குடியுரிமை பெற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்றோ கூறப்படவில்லை. திருமணம் செய்தவர்கள் திருமண பதிவு அலுவலரின் எல்லைக்கு உட்பட்ட மாவட்டத்தில் 30 நாட்களுக்கு குறையாமல் வசித்தால் போதுமானது.

இருப்பினும், மனுதாரரின் விண்ணப்பத்தை சார் பதிவாளர் மனதை செலுத்தி பரிசீலிக்காமல் கண்மூடித்தனமாக நிராகரித்துள்ளார். சார் பதிவாளர் சிறப்பு திருமண சட்டப்படி திருமணத்தை பதிவு செய்ய அளிக்கும் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா? மணமக்கள் இருவரும் சிறப்பு திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளார்களா? என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

இ்ந்த வழக்கில் சார் பதிவாளர் சிறப்பு திருமணச் சட்டத்தையும், குடியுரிமை சட்டத்தையும் போட்டு குழப்பிக்கொண்டுள்ளார். இதனால் திருமண பதிவு விண்ணப்பத்தை வாங்க மறுத்துள்ளார். குடியுரிமை பெற இந்தியாவில் 2 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். அதற்காக இந்தியாவில் 2 ஆண்டுகள் வசித்த பிறகு இந்தியரை காதலித்து திருமணம் செய்தால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்வோம் என்றால் திருமண சட்டங்களுக்கு அர்த்தமே இல்லை.

அதிகாரிகள் தங்களின் சட்டப்படியாக கடமைகளை நிறைவேற்ற நீதிமன்ற உத்தரவு வாங்கி வருமாறு கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்பர். மனுதாரர் மனைவி இலங்கையிலிருந்து பறந்து வந்து மனுதாரரை கரம்பிடித்துள்ளார். அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அவரது திருமணம் செல்லாது என்றோ, அவர் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்றோ சொல்ல முடியாது.

எனவே, காரைக்குடி சார் பதிவாளர் மனுதாரரின் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். திருமணத்தை பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகம் வருவோரை நீதிமன்றத்துக்கு அனுப்பி நீதிமன்றத்தின் பணிச்சுமையை அதிகரிக்காமல் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டப்படியான கடமையை நிறைவேற்ற வேண்டும் என அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துரை ஐஜி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்".

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments