2020-ஆம் ஆண்டில் வாட்ஸ்-அப் அறிமுகம் செய்த 5 முக்கிய அம்சங்கள்
வாட்ஸ்-அப் உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் ஆப் ஆகும். 2020-ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றது, ஏனெனில் மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் நண்பர்களுடனான அரட்டைகளுக்கும், குடும்பங்களை இணைக்கவும், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் தகவல் பரிமாற்றம் செய்யவும் வாட்ஸ்அப் ஆப் பேருதவியாக இருந்தது. இதனால் வாட்ஸ்அப் பயன்பாடு குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டதில் ஆச்சரியமில்லை. சராசரியாக பயனர்கள் ஒவ்வொரு நாளும் 15 பில்லியன் நிமிடங்களுக்கு மேல் வாட்ஸ்அப் கால் அழைப்புகளில் பேசிக் கொண்டிருந்தனர் என கூறப்படுகிறது. 

ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டாவின் அறிக்கையின் படி, அக்டோபர் 2020 நிலவரப்படி, வாட்ஸ்அப்பில் 2 பில்லியன் செயலில் உள்ள உலகளாவிய பயனர்கள் உள்ளனர், பேஸ்புக் மெசஞ்சர் 1.3 பில்லியன் பயனர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, வீசாட் 1.2 பில்லியனுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப், ஐபோனுக்கான வாட்ஸ்அப் மற்றும் வாட்ஸ்அப் வெப்பில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து அதன் செயல்பாட்டை அதிகமாக்கியுள்ளது. 2020-ம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறைய அம்சங்களை அறிமுகப்படுத்தியது , அவற்றில் முக்கிய 5 அம்சங்கள் குறித்து நாம் இங்கு காண்போம்.

வாட்ஸ்அப் பேமென்ட் : 

இந்த ஆண்டில் வாட்ஸ்அப் அறிமுகம் செய்த முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று தான் வாட்ஸ்அப் பேமண்ட். 2020ம் ஆண்டின் இறுதியில் இப்போது இந்தியாவில் 20 மில்லியன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பேமென்ட் அம்சம் கிடைக்கிறது என்று அறிவித்தது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் இயங்குதளமான வாட்ஸ்அப் தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி,HDFC வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைத்து இந்த பேமென்ட் அம்சத்தை செயல்படுத்தி வருகிறது. பணம் செலுத்தும் அம்சத்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பணத்தை அனுப்புவது அல்லது பெறுவது எளிது. உங்கள் வாட்ஸ்அப்பில் சாட் பக்கத்தைத் திறந்ததும், இணைப்பு ஐகானுக்குச் சென்று பணம் செலுத்தும் விருப்பத்தை க்ளிக் செய்து உங்கள் வங்கி கணக்கை இணைத்து பணப்பரிமாற்றம் செய்யலாம். 

டார்க் மோட் :

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாட்ஸ்அப் தனது செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சத்தைச் சேர்த்தது. அதுதான் டார்க் மோட். டார்க் மோட் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் தொலைபேசியின் பேட்டரியை சிறிய வித்தியாசத்தில் சேமிக்கவும் செய்கிறது. நீங்கள் அதை இயக்கும்போது, இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் அனைத்து பிரிவுகளின் பின்னணியையும் அடர் சாம்பல் நிறமாக மாற்றும். டார்க்  தீம்மை (theme) இயக்க முதலில் அமைப்புகள் பகுதியைப் பார்வையிட வேண்டும். பின்னர், ‘சாட்ஸ்’ என்பதை க்ளிக் செய்யவும். இப்போது, ‘தீம்’-க்குச் செல்லவும். இது ஒளி, இருண்ட மற்றும் கணினி இயல்புநிலை உள்ளிட்ட மூன்று விருப்பங்களைக் காண்பிக்கும். அண்ட்ராய்டு மற்றும் iOS வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த டார்க் மோட் பயன்முறை கிடைக்கிறது.

வாட்ஸ்அப் டிஸ்அப்பியரிங் மெசேஜ் :

வாட்ஸ்ஆப் சில நாட்களுக்கு முன்பு டிஸ்அப்பியரிங் மெசேஜ் (Disappearing Messages) எனும் ஒரு புதிய அம்சத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அம்சம் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது.

வாட்ஸ்ஆப்பின் இந்த "மறைந்துபோகும் மெசேஜஸ்" அம்சம் ஒருமுறை இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு அழிந்துவிடும், அது மீடியா கோப்புகளாக இருந்தாலும் சரி, ஆடியோ கோப்புகளாக இருந்தாலும் சரி அல்லது சாதராண டெக்ஸ்ட் மெசேஜாக இருந்தாலும் சரி அது தானாகவே மறைந்துவிடும். இருப்பினும், ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட மீடியா கோப்புகள் அப்படியே இருக்கும்.

மியூட் குரூப் அம்சம் :

வாட்ஸ்ஆப்பில் மியூட் குரூப் அம்சம் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை தருகிறது. இதன் மூலம் எரிச்சலூட்டும், மற்றும் அதிவேகமான வாட்ஸ்அப் குழுக்களை எப்போதும் முடக்க வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. mute a chat always என்பது எப்போதுமே குறிப்பிட்ட ஒரு சாட்டை ம்யூட் செய்ய உதவுகிறது. மேலும் storage management tool என்ற புதிய அம்சத்தையும் வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கியுள்ளது. 

க்ரூப் வாய்ஸ் / வீடியோ அழைப்பு வரம்பு அதிகரிப்பு :

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்தனர். பெரும்பாலான மக்கள் நண்பர்கள், குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவும், அலுவலக தகவல்களை பரிமாறி கொள்ளவும் வாட்ஸ்அப் துணை புரிந்தது. வாட்ஸ்அப் பெரும்பாலும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவதால், சிறந்த அனுபவத்திற்காக வாய்ஸ் / வீடியோ அழைப்பு வரம்பை அதிகரிக்க நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகளுக்கு நான்கு பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என இருந்ததை எட்டு நபர்கள் பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட்டை வழங்கியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments