ராமநாதபுரம் மாவட்டத்தில் உயிர்ப்புடன் பின்பற்றப்படும் கடலுக்கு அடியில் கூண்டு வைத்து மீன்பிடி முறை
கடலுக்கு அடியில் கூண்டு வைத்து மீன்பிடிக்கும் மிகப் பழமையான மீன்பிடி முறை ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இன்றளவும் உயிர்ப்புடன் பின்பற்றப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தங்களின் வசதிக்கேற்ப விசைப் படகு, நாட்டுப் படகு, பைபர் படகு, பாய்மரப்படகு, கட்டுமரப்படகு என ஐந்து வகையான படகுகளை மீன்பிடிக்கப் பயன் படுத்துகின்றனர். இது தவிர கரை வலை, பட்டி வலை, கூடு வைத்து மீன்பிடித்தல் ஆகிய பாரம்பரிய மீன்பிடி முறைகளையும் பின்பற்றுகின்றனர்.
இதில் கடலுக்கு அடியில் கூண்டு வைத்து மீன்களைப் பிடிக்கும் முறை ராமேசுவரத்தில் ஓலைக்குடா, சங்குமால், மாங்காடு, சம்பை, வட காடு, அரியாங்குண்டு, மண்டபம், மண்டபம் முகாம், மரைக்காயர் பட்டினம், வேதாளை, கீழக்கரை ஆகிய கிராம மீனவர்களால் இன்றும் உயிர்ப்புடன் பின்பற்றப்படுகிறது.

தனி நபராகவோ, அல்லது இரண்டு மூன்று நபர்களுடன் இணைந்தோ கூண்டு வைத்து மீன் பிடிக்கும் முறையைச் செய்யலாம். ஒரு நபர் அதிக பட்சம் 15 கூண்டுகள் வரையிலும் வைத்து தொழில் செய்ய முடியும்.

இந்த கூண்டு வைத்து மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் கடலுக்கு அடியில் மீன்கள் அதிகமாகத் திரளும் பாறைகள் உள்ள பகுதிகளைத் தேர்வு செய்து தங்களின் கூண்டுகளை பாறைகள் பக்கத்தில் வைக்கிறார்கள். குறைந்தது 6 அடியிலிருந்து 30 அடி ஆழம் வரை கடலுக்குள் மூழ்கி இந்தக் கூண் டுகள் வைக்கப்படுகின்றன.

கூண்டு செய்யும் முறை

இந்த கூண்டைச் செய்வதற்கு நாட்டு உடை மரத்தை மீனவர்கள் பயன்படுத்துகிறார்கள். உடை மரத்தின் கிளையில் 30 முதல் 40 குச்சிகளை எடுத்து, குச்சிகளின் மேல் உள்ள தோலை உரித்து கூண்டு பின்னப்படுகிறது. பச்சையாக உள்ள உடை மரத்தின் தோலை 4 நாட்கள் வெயி லில் காயவைத்து பயன்படுத்துவதால் கூண்டு பின்னுவதற்கு இலகுவாக இருக்கும். இந்தக் கூண்டில் மீன்கள் போகக்கூடிய அளவுக்கு ஒன்று முதல் நான்கு வாசல்கள் செய்யப்படுகின்றன. இந்த வாசல்கள் வழியாக கூண்டினுள் செல்லும் மீன்கள் வெளியே வர முடியாது. இந்தக் கூண்டை அதிகப்பட்சம் 2 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். கூண்டின் அளவைப் பொறுத்து ரூ. 500-லிருந்து ரூ. 2000 வரையிலும் விற்கப்படுகிறது.

இந்தக் கூண்டுகளை நாட்டுப்படகு அல்லது கட்டுமரங்களில் ஏற்றி 6 அடியிலிருந்து 30 அடி ஆழம் வரையிலும் உள்ள கடற்பகுதிக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. மீன்களை கவரும் வகையில் கூண்டுக்கு உள்ளே இறால் மண்டை, இறந்த கணவாய், இறந்த நண்டு ஆகியவை இரையாக வைத்து கூண்டை கடலுக்கு அடியில் பாறைகளுக்கு அருகே வைக்கப்படும். ஒருநாள் இடைவெளி விட்டு மறுநாள் காலை நேரத்தில் கடலுக்கு அடியில் மூழ்கிச் சென்று கூண்டை மேலே கொண்டு வந்து அதில் சிக்கி உள்ள மீன்களை கரைக்கு வந்து விற்பனை செய்கிறார்கள் மீனவர்கள். ஒரு கூண்டில் ஒரு கிலோ முதல் 5 கிலோ வரையிலும் மீன்கள் சிக்கும்.

இது குறித்து மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர் இசாக் கூறியதாவது,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரம்பரியமாக நடைபெற்ற இந்த தொழில் தற்போது நவீன தொழில்நுட்ப மீன்பிடி முறைகளால் அழிந்து வருகிறது. கடலில் மூழ்குபவர்கள், கூண்டு பின்னத் தெரிந்தவர்கள் கடலில் எந்த இடத்தில் மீன்கள் கிடைக்கும் என்ற பாரம்பரிய அறிவு கொண்டவர்களால் இந்தக் கூண்டு வைத்து மீன்பிடிக்கும் தொழில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூண்டில் வில மீன், ஓரா மீன், நகரை மீன், கணவாய் மீன், பாறை மீன்கள் அதிகளவில் மாட்டிக் கொள்ளும். விசைப்படகு மீனவர்கள் போன்று பெரிய வருமானம் இல்லை என்றாலும் இயற்கை விவசாயம் போன்று பாரம்பரியமாகச் செய்து வருகிறோம் என்றார்.

கூண்டு தயார் செய்வது எப்படி?

நாட்டு உடை மரங்கள் கிடைக்காத பட்சத்தில் ஈச்சமரம், பனைவேர், கருவோடை வேர் பயன்படுத்தியும் கூண்டு செய்கின்றார்கள். இது தவிர பேக்கிங் செய்யப் பயன்படும் பிளாஸ்டிக் நரம்பினைக் கொண்டும் கூடு செய்கிறார்கள்.

கூண்டு மீன்பிடித் தொழில் செய்ய அதிக முதலீடு தேவைப்படாது. தினசரி வருமானம் கிடைக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments