முத்தலாக் தடை சட்டத்தின்படி கணவனின் தாய் மீது குற்றம் சாட்ட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
முத்தலாக் சட்டப்படி முஸ்லிம் ஆண் மீது மட்டுமே குற்றம் சாட்டலாம், அவரது தாய் உட்பட உறவினர்கள் மீது குற்றம் சாட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூர் காவல் நிலையத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் தனது கணவர் முத்தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்ததாக புகார் அளித்தார். இதன் பேரில் அப்பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இதில் கணவரின் தாயார் மீது முத்தலாக் தடை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 438-வது பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து கணவரின் தாய் ரஹ்னா ஜலால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதன் பிறகு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

முஸ்லிம் ஆண் ஒருவர் தனது மனைவியிடம் தலாக் கூறுவது, முத்தலாக் தடை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் குற்றமாகும். இந்த சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ் அவருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண் மீது மட்டுமே குற்றம் சாட்ட முடியும். அவரது தாய் மீது குற்றம் சாட்ட முடியாது.

முத்தலாக் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்ஜாமீன் வழங்கலாம். இதற்கு புகார் அளித்த பெண்ணை அழைத்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, முன் ஜாமீன் மனு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்தும் நீதிமன்றம் முடிவு எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உச்ச நீதிமன்றமே முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

முன்னதாக, முத்தலாக் கூறிய கணவரின் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தில் சரண் அடைய அவருக்கு கால அவகாசம் வழங்கியது. ரெகுலர் ஜாமீன் கோருமாறு அறிவுறுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments