ஒற்றை கேள்வி... 126 கழிப்பறைகள்; நாசா செல்லும் பள்ளி மாணவியால் பயனடையும் புதுக்கோட்டை கிராமம்




அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்கே செல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில், கழிப்பறை மிக அவசியம் என்பதைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவர் உணர்த்தியுள்ளார்.

சிதிலமடைந்த வீடு, இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தந்தை, மனநிலை பிறழ்ந்த தாய், தன்னுடைய நிழலில் வளரும் இளைய சகோதரன் என்ற குடும்பப் பின்னணியில் ஒரு பள்ளி மாணவியின் முன்னேற்றம் என்னவாக இருக்கும்?



இதற்கான நிகழ்கால உதாரணம் புதுக்கோட்டை அருகே ஆதனங்கோட்டையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஜெயலட்சுமி.

வறுமையான, ஆதரவற்ற குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்லக் கடந்த ஆண்டு தேர்வானவர் ஜெயலட்சுமி. இவரின் சாதனைகள் குறித்து நம்மில் சிலர் அறிந்திருக்கலாம். ஆனால், அவரின் கடின உழைப்பும் தைரியமும் மனிதநேயமும் பலர் அறியாதவை.

வீட்டில் சமையல் உட்பட அனைத்து வேலைகளையும் செய்துகொண்டு, சிறப்பாகப் படிப்பதுடன் மாலை நேரத்தில் கூலி வேலைக்குச் சென்று ஒற்றை ஆளாய்த் தன் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார் ஜெயலட்சுமி.




ஜெயலட்சுமியின் வீடு
தினந்தோறும் ஓய்வே இல்லாமல் வீட்டு வேலை, படிப்பு, கூலி வேலை என்பது சிரமத்தை அளிக்கவில்லையா என்று கேட்டதற்கு, அது ஒன்றும் பிரச்சினை இல்லைங்க. பாத்துக்கலாம் என்று புன்னகைக்கும் ஜெயலட்சுமி, தொடர்ந்து பேசுகிறார்.

''ஸ்கூல் முடிச்சிட்டு தினமும் சாயந்தரம் முந்திரிப் பருப்பு உறிக்கப் போவேன். நாம செய்யற வேலைக்கு ஏத்த மாதிரி சம்பளம் கிடைக்கும். அதை வச்சு செலவுகளைச் சமாளிச்சுக்குவோம். ஊரடங்கு காலத்துலயும் வேலைக்குப் போய்க்கிட்டுதான் இருக்கேன்.

சின்ன வயசுல இருந்து நல்லாப் படிப்பேன். இப்போ ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளில 12-வது படிக்கறேன். அடிப்படையில் நான் கேரம் ப்ளேயர். ஒருநாள் விளையாடிட்டு இருந்தப்போ மழைத்தண்ணில ஒரு பேப்பர் கெடந்துச்சு. அதை எடுத்துப் பாத்தப்போ ராக்கெட் படம் போட்ருந்துச்சு. எக்ஸாம் எழுதி நாசா போன மாணவி ஒருத்தர் பத்தின செய்தி அது.


ஜெயலட்சுமி
சரி, நாமும் ஏன் முயற்சி பண்ணிப் பாக்கக் கூடாதுன்னு நினைச்சு ஸ்கூல்ல கேட்டேன். அவங்க வழிகாட்டல்படி ஸ்பேஸ் பத்தி நிறையப் படிச்சு தேர்வு எழுதினேன். கம்ப்யூட்டர் சென்டர் போய் பணம் கட்டி தேர்வு எழுத வசதியில்ல. சித்தப்பா போனை வாங்கி அதுலயே எழுதினேன். ஆங்கில வழில தனியார் நிறுவனம் நடத்தின தேர்வுல 4 ஆயிரம் பேர்ல ஒருத்தியா தேர்வானேன்.

போன வருஷம் இது நடந்துச்சு. நாசா போய்ட்டு வர ரூ.1.69 லட்சம் தேவைப்பட்டுச்சு. விஷயம் கேள்விப்பட்டு நிறையப் பேரு உதவி செஞ்சாங்க. போதுமான பணம் கிடைச்சதுக்கப்புறம் கிராமாலயா தொண்டு நிறுவனத்துல இருந்து என்னைக் கூப்பிட்டுப் பேசினாங்க. உனக்கு எதாவது செய்யணுமேம்மா அப்படின்னு சொன்னாங்க. தேவையான உதவி கிடைச்சுருச்சுங்கன்னு சொன்னேன். வேற எதாவது செய்ய ஆசைப்படறோம்.. வீடு கட்டித் தரவா, டாய்லெட் வேணுமான்னு கேட்டாங்க'' என்கிறார் ஜெயலட்சுமி.

அதற்கு ஜெயலட்சுமி சொன்ன பதில் யாருமே எதிர்பார்க்காத ஒன்று. தனக்கு மட்டும் கழிப்பறை கட்டித் தருவதற்குப் பதில், ஊருக்கே கட்டித் தர முடியுமா என்று தயக்கத்துடன் கேட்க, அதிசயித்த தொண்டு நிறுவனம், உடனே சம்மதித்தது.

கிராமாலயா நிறுவனர் தாமோதரன் மேற்பார்வையில் ஆதனங்கோட்டையில் ஜெயலட்சுமி குடியிருக்கும் திருவள்ளுவர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 126 வீடுகளில் தலா ரூ.20 ஆயிரம் செலவில் 126 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு ஆன செலவு சுமார் ரூ.26 லட்சம். தனிக்கழிப்பறை, குளியலறையுடன் சேர்ந்த கழிப்பறை எனத் தேவைக்கேற்ற வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.


கிராமலாயா நிர்வாகிகளுடன் ஜெயலட்சுமி
இதுகுறித்து ஜெயலட்சுமி மேலும் கூறும்போது, ''முன்னாடிலாம் நான் டாய்லெட் போகணும்னா 2 கி.மீ. தூரம் நடக்கணும். போற வழில டாஸ்மாக், மெயின் ரோடு எல்லாம் இருக்கும். ஒரு பொண்ணா இதனால நிறையக் கஷ்டப்பட்டிருக்கேன். நம்மளை மாதிரிதானே அடுத்தவங்களும் கஷ்டப்படுவாங்க அப்படின்னு நெனைச்சுக் கேட்டேன். கிராமாலயாவும் அதைப் புரிஞ்சுக்கிட்டு 126 வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்தாங்க.

கரோனா பிரச்சினையால நாசா போறது தள்ளிப் போயிருக்கு. இந்த வருஷம் கூட்டிட்டுப் போறதா சொல்லி இருக்காங்க. அம்மாவுக்கு இப்போ சிகிச்சை கொடுத்துட்டு இருக்கோம். சீக்கிரம் நல்லபடியாக ஆகிடுவாங்கன்னு நம்பறேன். சட்டம் படிச்சு முடிச்சுட்டு ஐஏஎஸ் ஆகணும்னு ஆசை. எதிர்காலத்தில் அதை நடத்திக் காட்டுவேன்'' என்று தன்னம்பிக்கையுடன் பேசினார் ஜெயலட்சுமி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments