ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.7 லட்சம் இழந்த இளைஞர்; திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை




ஆன்லைனில் ரம்மி விளையாடி சுமார் ரூ.7 லட்சம் வரை இழந்த இளைஞர், திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

கோவை, ஆவாரம்பாளையம், இளங்கோ நகரைச் சேர்ந்தவர் எல்வின் பிரட்ரிக் (29). தனியார் நிறுவன ஊழியரான இவருக்குத் திருமணமாகவில்லை. ஆன்லைன் ரம்மி விளையாட்டைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனைக் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.



இந்நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது தொடர்பாக, அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். கடந்த 6-ம் தேதி பீளமேடு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தனர்.

கடந்த 5-ம் தேதி காலை 9.30 மணிக்கு திருப்பூரில் ஊத்துக்குளி சாலையில் உள்ள கொங்கு பிரதான சாலை பகுதி அருகே உள்ள தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது, முகவரி தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லாததால், போலீஸார் அடையாளம் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. சடலத்தைத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பீளமேடு மற்றும் திருப்பூர் ரயில்வே போலீஸார் தொடர்ந்து விசாரித்ததில், மாயமான இளைஞர் எல்வின் பிரட்ரிக்தான், திருப்பூரில் கடந்த 5-ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியவந்தது.

இது தொடர்பாக திருப்பூர் ரயில்வே போலீஸார் கூறுகையில், "இறந்த எல்வின் பிரட்ரிக் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வந்துள்ளார். நாள்தோறும் பல மணி நேரம் விளையாடியதில் சுமார் ரூ.7 லட்சம் வரை இழந்துள்ளார்.

தனது சகோதரி மற்றும் நண்பர்களிடம் கடனும் பெற்றுள்ளார். தனியார் கம்பெனியில் இருந்து வேலையில் இருந்து வெளியேறி மன உளைச்சல் ஏற்பட்டு, விரக்தி அடைந்துள்ளார். ஏற்கெனவே இரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர், தற்போது தற்கொலை செய்துள்ளார்.

இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது. இளைஞர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments